- காதலும் காமமும் இருந்த இடம்.
எங்கோ தூரத்தில் காயும் நிலவிடம்
என் காதலைச் சொல்லிப் புலம்புவதில்
பயனொன்றுமில்லை
பசலை நிறைந்த மார்புகள் ரெண்டும்
பரிதவிக்கின்றனவே என்பதில்
ஆழ்ந்த காமமில்லை
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்
எனத் தோழியை உசுப்புவதிலும்
செவிலித்தாயை அழவைப்பதிலும்
அன்போ காதலோ இல்லை இல்லவேயில்லை
என் காதலும் காமமும் இருப்பதெல்லாம்
மழிக்காத உன் மார்பில் தலை சாய்த்தபடி
தொடை தட்டும் என் நீள் முடியில்
உனக்கு மீசை வைத்து அழகு பார்த்த
அழகிய நிமிடங்களில்
கலவி செய்த களைப்புடன்
எனை அணைத்திருப்பாயே
அக்கணமே அக்கணமே….
- பின்னிரவில் எழுதப்பட்ட காதல் கவிதை.
அந்தப் பின்னிரவுகளில் இப்படித்தான்
கவிதையொன்று மலர்கிறது
எல்லாப் பின்னிரவுகளும் கவிதைகளை
எழுதுவதற்கென்றே படைக்கப்பட்டன போலும்
ம்… உண்மை தான்
ஆயினும்
யாரோ ஒருவன் துடைத்தெறிந்த
காகிதத்திலே தான் எல்லோரும்
கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
நாளை நீங்களும் எழுதக் கூடும்…
அந்தக் காகிதம் சிறு சிறு கவிதைகளால்
நிரம்பிக் கொண்டே போகிறது.
தேர்ந்த கவிஞன் ஒருவன் பெருங்கவிதையொன்றை எழுதியிருக்கிறான்.
சில கிழடுகள் மரபுக் கவிதைகளையே
மாறி மாறி எழுதி வைத்துள்ளார்கள்.
இளவல்கள் புதுக் கவிதைக்கு முயற்சித்திருக்கிறார்கள்.
சிலர் பதட்டத்தில்
ஹைக்கூ எழுதி விட்டு ஓடிவிட்டார்கள்.
அந்தக் காகிதத்திற்கு எல்லாப் பேனைகளும் ஒன்றுதான்.
எழுதப்பட்ட கவிதைகள் தான்
வேறு வேறு….
இது அவனுக்கான முறை
அவன் கவிதையை எழுதுவதற்கான பின்னிரவு!
மரணக் கவிதை எழுதப்பட்ட காகிதமொன்றில் முதன்முறையாக
காதல் கவிதை எழுதப்படுகிறது
அவனுடைய கவிதை இப்படித்தான் ஆரம்பமானது.
அரவமின்றி பூனைக்குட்டியாய் அவளுக்குள் கொடுகிக் கொள்கிறான்
அவள் நீள்முடியின் நுனியில் மீதமிருக்கும் ஈரத்தில் நெற்றி நனைக்கிறான்.
ம் என்று புரண்டு படுக்கிறாள்.
இது கவிதை எழுதுவதற்கான உத்தரவு அல்லாமல் வேறு என்ன!
காதல் கவிதை நீள்கிறது……
விடியும் வரை…..