நிலவை ஒரு போத்தலுக்குள்
ஒளித்து வைத்துவிட்டு
டார்ச்லைட் வெளிச்சத்திற்குள்
உலகத்தை இயங்க வைக்கிறேன்,
ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல,
ஒரு சில மாதங்கள்,
எப்போதும் போல் பூமி
இப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிறது…
எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் உலகம் இயங்கிக்கொண்டே தான்
இருக்குமென,
இப்போது திறந்துவிட்டேன்
போத்தலுக்குள் முடங்கிக்கிடந்த நிலவை,
இப்போது இருளத்தொடங்குகிறது எனக்கான சூரியன்!
கசாப்புக் கடையில்
இறைச்சி வெட்டும் நேரங்களைத் தவிர
மற்ற நேரங்களில்
ஜீவகாருண்யத்தைப் பேசி பேசி
ஓய்ந்து கொண்டிருக்கும் அவன் மந்தையில் வசிக்கும்
ஆடொன்று தற்கொலை செய்துகொண்டது…
அவன் வார்த்தைகளில் வலம்
வந்து கொண்டிருந்த
ஜீவகாருண்யம் செத்துக்கிடந்தது ஆட்டுக்குட்டியின் அருகில்!