நமக்காகக் காத்திருப்பது போல..,
சில காத்திருப்புகள்…!!!அடர்த்தியாய் காய்த்திருந்த
அரி நெல்லிக்காய் மரம்
மரத்திலிருந்து தவறி விழுந்த
அணில் பிள்ளையும்..
மைனா குஞ்சும்
சேதாரம் இன்றி தாயுடன் சேருவோமென
நம்பிக்கையுடன்
என் கைகளில் காத்திருந்தது…!!
மூச்சை பிடித்து ஒன்று, இரண்டு மூன்றென..
ஆழக்கிணற்றில் நீர் இறைக்க,
கப்பியோடு வாளியும்
உள்ளிருந்து மெல்ல..மெல்ல
என் கை சேர காத்திருந்தது..!!
கதிர்கள் முற்றி சாய்ந்தாடிய கதிர்கள்
உழவனின் உயிர் சிரிப்பைப் பார்த்து..
அறுவடைக்காலம்
ஆனந்தமாய் வரட்டும் என
நெல்மணிகளைச் சிந்தாமல் காத்திருந்தது…!!
காத்திருப்பு எப்போதுமே
சுகம் தான்…!!
ஓடி வரும் ரயிலுக்காக…
தண்டவாளம் காத்திருப்பதைப் போல….!!!
குமரி உத்ரா