cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 5 கவிதைகள்

முத்துராசா குமார் கவிதைகள்


1)

பிறவியிலிருந்து
கால்கள் முளைக்காத
எனது பச்சைக்கிளி
பூமியிலிறங்காமல்
ஆயுள் கடந்து கூடவே பறக்கிறது.
அதனைப் பேச வைக்க
பழத்தோடு பட்டமிளகாய் கலந்து
வானுக்குத் துப்புகிறேன்.
உடன் வராமல் நின்றவுடன்
நிலம் குனிந்தேன்.
மண்ணாழத்தில்
வெடப்பாய் நீந்துகிறது
குடல்களற்ற
தொல்லியல் கொறவை.
பாதி கைகளுடைய
நானோ
கம்புக்கூட்டில் பிடித்து
தரையில் நரம்புத்தூண்டில் போடுகிறேன்.
என் மனங்கோணவிடாத
கொறவையோ
நீண்டநேரம் கழித்து
புழுவில்லா வெத்துமுள்ளை
பசியாறும் பாவலாவில் கடிக்கிறது.
நாவின் தோலுரிந்த
கிளியோ
முதல் சொல்லாக
தூண்டிலை
டக்கெனத் தூக்கச் சொல்கிறது.

2)

கம்மாயில்
நீர் சாகும் பருவம் பிறந்ததால்
மீன்களின் ஏல முதலாளிகள்
கூடாரங்களைக் கழட்டி
வேற்று திசைக்குப் பறந்தனர்.
கோரைக்கிழங்குகள் அகழ
கம்மா வறளுக்குள் முண்டுகிறோம்.
பெருங்கொக்கின்
வீச்சமடிக்கும் சவயெலும்பை
கண்டெடுத்தாள் பாப்பா.
கிழங்குச்சாறின் வாசமூற்றி
கொக்கை விதையாகப் புதைத்துவிட்டுத்
திரும்ப நிலமுட்டுகிறாள்.


 

About the author

முத்துராசா குமார்

முத்துராசா குமார்

கவிஞர், எழுத்தாளர். இவரின் பிடிமண், நீர்ச்சுழி எனும் கவிதைத் தொகுப்புகள், ஈத்து எனும் சிறுகதைத் தொகுப்பு ஆகிய நூல்களை சால்ட் & தன்னறம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website