எவரென்று தெரியாத மனிதர்கள் எதிரிபோல் துரத்தி அடித்தார்கள்
திட்டமிட்ட பொறியில் மாட்டி சிரம் நெறிக்கப்பட்டேன்
பிறந்த வீட்டிலேயே தின்னும் உணவில் ஆலத்தால் கொல்ல முயற்சியாக்கப்பட்டேன்
வாழத் தகுதியற்ற வாழ்வின் தனிமையில் நடைப்பிணமாய் வாழ்ந்தேன்
இருண்ட வாழ்வில் தீபமாய் வந்தவள்
என்னைத் தத்துப்பிள்ளையாய் தலைகோதி தாயாய் வளர்த்தாள்
கவிதையில் தாலாட்டினாள்
இந்தப்பிறவியின் பலனை முழுவதும் பெற்றவனானேன்
திடீரென ஓர்நாள் இயேசுவைச் சிலுவையில் அறைந்ததுபோல்
விரித்துப் படுக்கவைத்து பலகையில் அடிக்கப்பட்டேன்
ஆயுளே அவள் மட்டும்தான்
நம்பியபோதுதான்
ஆய்வகத்தில் பரிசோதனைக்கு அவள் கைகளால் நெஞ்சில் அறுக்கப்பட்டேன்
முனைவர் பட்டப்படிப்புக்கு
மூச்சை எடுத்துக்கொண்டாள்
என் பரிசாய்.
எப்போது பயணித்தாலும்
தப்பாமல் தூண்டிடும்
மனதிற்குள் மௌனமாய்
நிறைவேறாத ஆசையாய்
ஒருமுறையேனும் இழுத்துவிட
ரயில் பெட்டியின் அபாய சங்கிலி…!