1)
சமீப நாட்களாக நான் அவனை அறிவேன்.
தெருக்கோடி நூலகத்தில்
அதிலுள்ள நூலாம்படைகளை
எண்ணிக்கொண்டு அமர்ந்திருப்பான்
சிலநேரம் வழிபாட்டுத்தலம்
மொத்தமும் சுத்தம் செய்து கொண்டிருப்பான்..
அவனுக்கென ஈயப்பட்ட உணவை மிச்சமின்றி
காக்கைக்கும் நாய்க்கும் பூனைக்கும் பகிர்ந்தளித்துவிட்டு
சுவர் பார்த்துச் சுருண்டுகிடப்பான்..
அடுத்த நாள் ஏதேனும் வனத்திற்குள்
தொலைந்து போவான்..
பின் திடுமென வருவான்
அவன் மொழிகளில்
எப்போதும் கவிதை இருக்கும்
சிலநேரம்
உயிர் கசியப் பாடிக்கொண்டிருப்பான்
தேர்ந்த சித்திரகாரனும் கூட..
ஞானியோ என நெருங்கினால்
தன்னை பைத்தியம் என நிரூபிப்பான்.
பைத்தியம் என விலகினால்
மேதைமையில் ஈர்ப்பான்..
அவன் கலையை ரசித்தோ
அவனை ரசித்தோ
சிலநேரம் நீளும் சில கரங்கள்
பூங்கொத்துகளோடு..
புன்னகையுடன் தட்டிவிடுவான்.
நீண்டகரமோ அவனைச் சபித்தபடி நகரும்..
அவனைப் புகழ்ந்தோ இகழ்ந்தோ
தூஷித்தோ ரசித்தோ பொழுதுபோகவோ
அவனை சுற்றி எப்போதும் கூட்டமிருக்கும்.
எதையும் பொருட்படுத்த மாட்டான்.. .
எந்த தேவதை ஆசிர்வதித்துப் போனதோ..
ஒரு பின்னிரவிலிருந்து அவன் மாறிப்போனான்
அவன் பாடல்களில் இனிமை கூடியது
சித்திரங்களில் அழகு சுடர்விட்டது
பேச்செல்லாம் கவிதையானது …
இப்போது சிலநாட்களாக அவன் பாடுவதெல்லாம் முகாரி..
ஓயாத மரண ஓலம்..
நரம்பிடையே வலியென ஊடுருவும்
பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தான்
சமீப நாட்களாக அவனைக் காணவில்லை…
தொலைத்ததைத் தேடிப் போனானோ
தானே தொலையப் போனானோ..
உங்கள் பாதையில் எவரேனும்
பாதங்களை உற்றுப் பார்த்தபடி கடந்தாலோ
உயிர் வற்றிச் சுருண்டிருந்தாலோ சொல்லுங்கள்..
அது அவனே தான்..
அடையாளம் கேட்கிறீர்களா..??
அவன் சர்வ நிச்சயமாய் என் சாயலிலிருந்தான்..!
2)
உன் திசை நோக்கி நீளும்
என் பிரியத்தின் வேர்களுக்கு
தாய் நோக்கிக் கைநீட்டும்
குழந்தையின் சாயல்..!
3)
யுகா… உனதான என்நாட்களெல்லாம்
பூத்துப் பூத்து உதிர்கிறது நெடுஞ்சாலையோர அரளியென..
உன்நினைவுகளையே போர்த்திக்கொண்டு
என்னை நானே பிய்த்துத் தின்றபடி காத்திருக்கிறேன்
ஒரு கூட்டுப்புழுவைப்போல்..
மனம்பிறழ்ந்தவனின் நாட்குறிப்பென
மனச்சுவரெங்கும்
உன்னையே எழுதிக் கொண்டலைகிறேன்..
ஒரு மலையரவு பிடியென
என் மூச்சை இறுக்கும் நீயற்ற இந்நாட்களை
எழுத மொழியில்லை..
நல்லாயனுமாயிருந்து என்னையும் மீட்டு இரட்சிதிடு என் தேவனே..!
4)
பாலையின் நெடுங்கோடையென தகிக்கிறது
நீயற்ற இந்நாட்கள்…!
ஒரு கல்பொறுக்கி குருவியின்
தேர்ந்த லாவகத்தோடுதான்
உன் நினைவுகளை
இழுத்தும், வளைத்தும்,உருட்டியும்
சமைத்திருக்கிறேன் இந்த கூட்டை…
காத்திருப்பின் வெம்மையில் உதிரும்
என் சிறகுகளின் அடியில்
அடைகாக்கப்படுகிறது
உன் சத்தியங்களும். வாக்குகளும்..
நீர்த்தடம் தேடி நீளும் வேர்களென
உன் பிரியங்களின் திசை நோக்கி நீள்கிறது
என் நேசத்தின் நரம்புகள்..
புறத்தே காய்ந்தாலும்
அடி வேருக்கு
உயிர் சுரக்கும் நீர்மையென்றாகிறது
அவ்வப்போது நீ உதிர்க்கும்
ஒற்றை புன்னகை…!