மௌனத்தின் நாவுகள்
தனியறையில்
துயில் கொள்கின்றன
நிழல் சுவர்களை
உடைக்கும் கனவுகள்
வந்து போகின்றன
என் இமைகளை இரவோடு கோர்த்து வைக்கிறேன்
வெளிச்சத்தின் கதவுகளைத்
திரைச்சீலைகள் மறைத்து வைப்பது போல்
உறைந்து போன பழைய கனவுகள்
உயிராழத்தில் புதைந்து கிடக்க
இசைக்கும் நரம்புகளை
உடல் மூடி பாதுகாக்கும் உயிரின் பேராவல்
அறிவதென்னவோ
வாழ்வின் மிச்சங்கள்
கேட்பதென்னவோ
உயிர் மீட்கும் யாசகம்
உடல் சூட்டில் நான் என்பது உண்மையாகி
மீண்டும் இமை திறக்கும் படலம்
ஓய்வறியாமல் கடக்கும் பொழுதுகளில்
உப்பாய் ஒரு உபதேசம்
என் செவியருகில் ஏதோ ஒரு மந்திரம்
நடந்தும் கிடந்தும்
வாழ்வே உப்பாகிப் போனதில்
ஒரு சமரசம் செய்து கொள்கிறேன்
விரல் சூப்பி வாழ்வைத் தொடங்கும்
ஒரு குழந்தையிடம்
இப்போது வாழ்வு கொஞ்சம் இனிப்பாகி
நாக்கில் சுவையாயிருக்கிறது பெரு விருப்புடன்.