cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 5 கவிதைகள்

ஆறுமுக விக்னேஷ் கவிதைகள்


1. மழைக்கண்

ஊர் குளத்தைப்
பெருக்கிய மழைகளைத் தான்
அதிகமாக ஞாபகம் வைத்திருந்தார் தாத்தா

ஐப்பசி கார்த்திகையில்
குளத்தைப் பெருக்கிய
மழைகளை விட
கோடைகளில் பெய்து
பெருக்கிய மழைகளை
இன்னும் ஞாபகம் வைத்திருந்தார்
துல்லியமாக

கீழக்குளம் பெருகி
கானாக்குளம் பெருகி
வாகைக்குளத்திற்கு நீர் வந்து
மட்டம் தட்டி போகும் என்று
ஊரில் இருக்கும் ஒரு குளம்
பெருகும் வழியையும் சொல்கிறார்

மலைக்காட்டில்
அழுது தீர்க்கும் மழை
நதிகளைக் கூட
வெள்ளக் காடுகளாக்கி விடுகிறது

எவ்வளவு அழுதாலும் மழையால்
கடலை மட்டும் பெருக்கி விட முடியவில்லை
ஆனால் தெய்வத்திருவாகி விட்ட
தாத்தாவை நினைவில் கொண்டால்
கண்ணீரால் பெருக்கி விடலாம் கடலை.

2. களஞ்சியம்

அத்தை நட்டு வைத்த செடிகள்
அத்தனையும் செழித்து வளர்ந்து விடுகின்றன
வீட்டின் முற்றத்தில் இருக்கும்
கரும்பச்சை, துளசி,
மருதாணி, வெயில் ரோஜா,
எல்லாம் அவள் வைத்ததே
அத்தைக்கு அத்துணை கைவாகு

பாட்டியின் சமையலில்
ரசம், கோதுமை தோசை, சோள தோசை,
எல்லாம் அவ்வளவு ருசியாக இருக்கிறது
அவளது கைப்பக்குவம் அப்படி

மகப்பேறு என்றால்
ஊரில் எல்லோரும்
பத்மா மருத்துவமனையைத்தான் நாடுகின்றனர்
அந்த மருத்துவச்சி கைராசி மிக்கவர்

கைவாகு
கைப்பக்குவம்
கைராசி எல்லாம் ஒன்றுதான்

பலவற்றைக் குறிக்க
ஒரு சொல் மட்டுமே
இருக்கும் மொழியல்ல
ஒரு பயிரை விதைக்க
பல விதைகள் இருப்பதைப் போல
ஒரு பொருளைக் குறிக்க
பல சொற்கள் கொழிக்கும் மொழியே
கட்டற்ற கலைக்களஞ்சியம்.

3. தீராநதி

தனது பிம்பத்தால்
நதியில் ஒரு
பால்வண்ணக் கூழாங்கல்லாக
முடியாத நிலவு
தேம்புகிறது

தேம்பும் நிலவை
கோதிவிட்டு வருடி விட
நாணலை மயிலிறகாய்
வளர்த்து விட்டிருக்கிறது நதி.

About the author

மு.ஆறுமுகவிக்னேஷ்

மு.ஆறுமுகவிக்னேஷ்

Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
Jayashree Sriram

மழைக்கண் is my favorite, Thatha and mazhai brings back good memories.

Best wishes to you Arumuga Vignesh!

You cannot copy content of this Website