cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 5 கவிதைகள்

கண்ணன் கவிதைகள்

கண்ணன்
Written by கண்ணன்

  • செவுடிக்கடை

படித்த நேரத்தை விட

டீக்குடித்த நேரம் அதிகம்

கணக்கு வைத்துப் பரோட்டா

கையில் காசிருப்பின் பில்டர்

இல்லையெனில் கணேசன்

அம்மா கொடுக்கும் பத்தில்

பட்டினியால் புத்தகமாகும்

வாயால் வூடுகட்டும்

செல்வத்தைப் பிடிக்காதவர் 

எவருமில்லை எங்களுடன் 

நேத்துதான் சேர்மன் பேசுனாரு

பெருசா ஓட்டல் கட்டுன்னாரு

நாந்தான் வேனான்னுட்டன்

காலையிலேயே தள்ளாடும்

அவன் கால்கள் 

கன்னத்தில் அறைந்ததால்

அவன் மனைவி 

பெயர் மாறிச் செவுடியானாள்

காலையில் வயிற்றுக்கும்

இரவானால் உடலுக்கும் 

பசிதணித்தாள்

வண்டிகளுக்கு தினந்தோறும்

மழையடித்த ஒரு நாளில்

ஒண்டிய எங்களுக்கு

பாடமெடுத்தாள் என்றைக்கும்

கடன வுடன வாங்கிப் படிக்க 

அனுப்புன பெத்தவங்கள

என்னைக்கும் மறக்காம

படிப்பு மட்டும் பாருங்க

வீங்கிய கன்னமும்

சிவந்த விழிகளும்

வலிகளை விழுங்கிய 

புன்னகையுடன்

வலம் வருவாள்

நினைத்திருந்தால் 

நொடிப்பொழுதில்

வடக்கில் வசதியாக

காலாட்டி அமர்ந்திருக்கலாம் 

இருப்பினும் இன்றும் கூட 

தேநீர்ப்பாத்திரம் தேய்த்துப்

பையனுக்கு பொங்கிப்போடுவதால் 

தெய்வமாய் நின்றிட்டாள்

என்றுமவள் என்மனதில்.

  • பெண்களால் வழியும் பேருந்து

 

பெண்களால் வழிகிறது பேருந்துகள்

ஆண்கள் இடமின்றித்

திணறுகின்றனர் 

வாய்விட்டு சிரிக்கிறார்கள்

கோபப்படுகிறார்கள்

ஆண் தோழர்களுடன் பேசுகிறார்கள்

பிடித்த பாடலைக் 

கேட்கிறார்கள்

மல்லிகையும் கனகாம்பரமும்

நாசியைத் துளைக்கிறது 

சமையலறை சாளரத்தில்

எதிர்வீட்டு சுவர் மட்டுமே தெரிய

பேருந்தின் சாளரமோ

உலகையே காட்டுகிறது

தளைகள் ஏதுமின்றி

பேருந்தே பறக்கிறது

நடத்துனர் கேட்டார்:

கட்டணம் இல்லை

பயணச் சீட்டு மட்டும்

எங்க போறீங்க?’

பெண்மணி கேட்டார்:

இந்த பஸ் எங்க போகுது?


 

About the author

கண்ணன்

கண்ணன்

சேலம்-தாரமங்கலத்தை சார்ந்த கண்ணன் தற்போது பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவரின் முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு வெளிவந்தாக தெரிவிக்கிறார். சமீப காலங்களில் நுட்பம்- கவிதை இணைய இதழிலும், செந்தூரம், புரவி, தளம், நடுகல் போன்ற இதழ்களிலும் இவர் எழுதும் கவிதைகள் வெளியாகி இருக்கின்றன.
'கோதமலை குறிப்புகள் ' எனும் தலைப்பில் இவரின் முதல் கவிதைத் தொகுப்பும் வெளியாகி இருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website