முடியாத நம் உரையாடல்களின்
விடுபட்ட சொல் ஒன்று
தொக்கி நிற்கிறது
தொண்டைக்குழியில்.
அருந்தும் தேநீர் மிடறுகள்
நலம் விசாரித்து
இதம் தந்து போகின்றன
சில நேரம்.
காலம் தெரியாமல்
காத்திருக்கும் வலியைக்
காலங்காலமாக அனுபவித்திருக்கும்
அச்சொல்லுக்கு,
தானே ஏற்படுத்திக் கொண்ட
விதியை மீறிப்
பூத்துவிடலாம் எனவும்
ஒரு பேராசை உண்டு.
பூத்துவிட்டால்
காண்பாரற்று வாட நேரும் என அஞ்சி
மரித்துப் போகலாம் என முடிவு செய்யும் போதெல்லாம்
நின் பெயரின் அருகில் எரியும்
பச்சை விளக்கு
பேராசைக்கு உயிரூட்டுகின்றது.
அன்பே..!
என் சொல்லைச்
சூடிக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை.
அது மரிக்கும்வரை
அந்த பச்சை விளக்கையாவது
சிறிது அணைத்து வை.
கவிதையும் குரலும் : வித்யா.மு