cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 5 கட்டுரைகள்

சுப்ரபாரதிமணியன் கவிதைகள் குறித்து விக்ரமாதித்யன்


திரும்புதல்

 “பல விடுதிகளையும் மருத்துவமனைகளையும்
தாண்டி வீட்டிற்கு வந்திருக்கிறான்
தட்டுகளில் சாப்பாடு விழுவது
பல கண்டாகி விட்டது .
சாப்பாட்டு மேஜை அதிர்ச்சி தரக்கூடியது ஆகிவிட்டது.
விசேஷமாய் சமைக்கப்படவில்லை .

சாதாரண சமையல்தான்
இதுவே விருந்து எனப்படுகிறது
அவசரமாய் கண்கள் விழுங்குகின்றன
இன்னும் இன்னும் அவசரமாய்
வாய் உதடுகள் துடிக்கின்றன.

உதடுகள் துடிப்பது
பதற்றமான சமயங்களில் நடப்பதுண்டு
காற்றில் அலையும்
பனையோசை போலத்துடிக்கும்
அவசரத்தில் உண்டதில்
வயிற்றில் இடறல்
வயிற்றில் வரும் வலியை
மெல்ல முகம் காட்டுகிறது.

சாப்பிட்ட பரவசத்தின் துளி
மறைந்து போகும் அளவு
வயிற்றுவலி விஸ்வரூபக்கிறது

விடுதியும் மருத்துவமனையும்
படுக்கைகளை எல்லாருக்குமானதாக்கிவிட்டது
அழுக்கான தலையணைகளையும்
கிழிந்த போர்வைகளும் அற்ற
சுத்தமான விரிப்புப் படுக்கை
வயிற்று வலி நிவாரணமோ
ஆசுவாசமாய் தூக்கமோ
மனதில் வந்து போகின்றது
கேட்டிற்கு வெளியேத் தென்படும் தலைகள்
நலம் விசாரிக்கவென்றும்
நகைப்புக்கான இடம் கிடைக்குமாவென்றும்
சுத்தமான விரிப்புப் படுக்கையில்
வர்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.”

எது எப்படி கவிதையாகிறது சொல்ல முடியாது. பொருள் அம்சம். சொல் முறையால் சாத்தியமாகும். ஆரம்பமே அசாதாரண நிலையைக் காட்டிவிடுகிறது. அடுத்தடுத்து குறிப்புகளும் தகவல்களும் துலக்கமாகிவிடுகிறது.. அவள் யார்.. நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை.. உற்றார் உறவினர் தெரிந்துகொள்ளலாம். பாவப்பட்ட பெண் துன்பம் சூழ்ந்த வாழ்நிலை.. விடுதிகள் மருத்துவமனைகள் சென்று திரும்பி வந்திருக்கிறேன் பெண். உண்பதே அவஸ்தையாக உள்ள நிலைமையையும் உறக்கமே தற்காலிக நிவாரணமாகவும் மாறிவிட்டன. வாழ்வே அவலம் ஆகிப்போன ஒருத்தியின் கதையே விஷயம் ..சோகம் கவிதையாக.. முடிவு நகைமுரண்.

”எனக்கு இருக்கும் இதய நோயைப் பற்றிச்
சமீபத்தில்தான் அறிந்துகொண்டேன்
உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சிகளும்
என் வாழ்நாளை காப்பாற்றிவிடும்
என்ற நப்பாசை இருந்தது
ஆனால் பெண்கள் படுத்தும் உபத்திரம் தாள முடியவில்லை
அழகு என்று கூட வேண்டாம்
சற்றே இளமை 16 -25
சற்றே முதிர்ச்சி 40 -50 என்று எல்லாரும்
என் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறார்கள் .
தலை சாயத்தை இன்னும் ஆரம்பிக்கவில்லை
வயதான அழைக்கும் அழைப்பு வார்த்தைகளில்
கண்டுகொள்ள முடிகிறது
சருகாவதை விட உதிர்வது  துரதிஷ்டமானது.

வெறும் பார்வை பார்த்துக் கொண்டே
உதிர்ந்துவிடுவதில் துயரம் இருக்கிறது
பெண்கள் தரும் படபடப்பைத் தவிர்க்க
வீதியில் நடமாடாமல் இருக்க முடியாது
தொலைக்காட்சியைப் பார்க்காமல் இருக்க முடியாது
திரைப்படங்களைத் தவிர்க்க இயலாது
முத்தங்கள் கூட இல்லாமல் போகும்
வாழ்க்கை துயரமானது தான்.”

தன்மையிலேயே சொல்லப்பட்டுள்ளது. இதயநோய் பெண்கள் படுத்தும் உபத்திரம் இதயத்துடிப்பு முத்தங்கள் கூட இல்லாமல் போகும் வாழ்க்கை எவ்வளவு.. வெளிப்படையாக உள்ளதைச் சொல்வதில்..ஒரு முக்கியத்துவமும் உண்டு. உணர்வுள்ளவர்கள் உணர்வார்கள். நல்ல பகிர்ந்து கொள்ளல்.

”உனக்கு முத்தம் கொடுக்கவில்லை
உன் மூச்சுக் காற்றின் வெப்பம்
வெகு அருகாமையில்.
உன் தொடைகளின் இறுக்கம் என் புட்டத்தோடு.

உன்னை எந்த விதத்திலும்
தொடாதபடி நான்
ஜாக்கிரையுணர்வா /அலட்சியமா
எதுவுமில்லை
என் வார்த்தைகள் வீரியம் இல்லை
உன் வார்த்தைகளில் காலமில்லை
மடியில் கிடக்கும்
குழந்தைக்கானத் தாலாட்டு போல் இருக்கிறது
உன் அண்மை.
இது போதும்
உன்னைத் தொடாத போதும்
என் தனிமையில் தீயிலிருந்து தப்பித்துக்கொள்ள
உயிரை உருக்கும்
விரகத் தண்ணீர் மூச்சை அடக்காமலிருக்க
உன் அண்மை
கதகதப்பாய். “( பக்கம் 148)

இக்கட்டான/ எதுவும் செய்ய இயலாத வாழ்நிலை; கூறலாகவே முன்னிலையிடம் தன்மை , இரண்டு இடங்களில் உன் அண்மை; இதுதான் விஷயம்.பிறவெல்லாம் பேசப்பட்டு உள்ளபோதும் தனிமை இரக்கம் உள்ளதாம்; எனில் அகம் பற்றி அதிகம் சொல்லலாகாது.

ஒரு வகையில் நமது மரபு சொற்களாலாக் கவிதைதான் . பெரிதும் உருவகம் பிறிதுமொழிதல் எனக் கொண்டது உண்டு . புரியாது இராது. இப்படி இருப்பதையே நேர் கவிதை என வகைப்படுத்துகிறோம்.

 “பேண்ட் பாக்கெட்டுகளில்
நிரப்பப்பட்ட சாக்லெட்டில் பிரிக்கப் படாமலேயே.
நேற்று அவனைப் பிரிந்தபோது
(இடையில் வந்தவரை மீறி
சாக்லெட் அவருக்கும் சேர்த்துக் கொடுத்து இருக்கலாம் )
ஆனால் அவை எல்லாம்
அவளுக்கானது என்று பிறருக்குப்
பகிர்ந்தளிக்கவில்லை
இன்னும் அவள் வராத பரபரப்பு
சாக்லெட்டுகளை உதறிவிட்டு
உறைகளை மட்டும் பேண்ட் பாக்கெட்டுகளில்
நிரப்புமாறு ஆகி விட்டது.
அதன் சலசலப்பு நாராசமாய்
சுவைத்த சாக்கடைகளில் சாக்லெட்டுகளின் கசப்பு
தலைமுறைக்குமாகிவிட்டது
உறை பிரிக்கப்படாத ஒற்றை சாக்லேட்
நெருடிக்கொண்டே.
அதை அவளுக்காய் பிரித்து நீட்டும்போது
ஒருபாதி எனக்கும் ஆகலாம்
அப்போது ஒரு தலைமுறைக் கசப்பைக் கரைத்து
உடம்பில் பரவும் ஒரு துளி ஆறுதல்
அது போதும்.
நாம் எதிர்கொள்ளும்
இன்னுமொரு தலைமுறைக் கசப்பிற்கு.” (பக்கம் 49 )

இங்கே எடுத்துக்கொள்ளப்பட்ட கவிதைகள் எல்லாம் தன்னிலை வாழ்வினூடாக நேர்ந்த அனுபவங்கள்/ நிகழ்வுகள்தான் – மாலையில் இருக்கும் பாசி மணி போலப் பார்க்கப்போனால் சாதாரணமாக அமையப் பெற்ற வழமையான வாழ்க்கையில் நடக்காதவை . துரதிர்ஷ்டவசமான மாற்ற முடியாதது போல அவை மனம் சார்ந்தவை. துன்பம்தான். துயரம்தான். பகிர்ந்து கொள்வதால் மாற்றிக் கொள்வதாய் சுமையை இறக்கி வைப்பதாய் மறைக்கப்பட்ட வாழ்வு விஷயம் அசாதாரணமானது. அப்படி அப்படியே சொல்வதனால் குன்றிப் போய் விடாது /மனுஷி பற்றியது என்பது கொண்டால் அவள் படும் பாடு அதனால் உண்டாகும் பாடுகள். அவற்றால் விளையும் நோய்மை, உளைச்சல் எல்லாமே உள்ளது உள்ளபடியே .மொழியைத் துணைகொண்டு ; உள்ளதுள் இருப்பதை உரைப்பது உண்மை கவிதை தானே!

 “யார் இறந்து போகிறோம்
மர்மமாகவே இருக்கிறது
உன் முயற்சிகளெல்லாம்
வெளியில் தெரிந்து ஆர்ப்பாட்டங்கள் ஆகிவிட்டன
உன்னை உயிர்ப்பிக்க
நிறையப் பணமும் செலவாகி விட்டது
உயிர்ப்பித்தலின் லாபக் கணக்கு
அர்த்தமில்லாத இருக்கிறது
எனது முயற்சிகளுக்கான
அடையாளங்களைக் காண்பது கடினம்
டைரிக்குறிப்புகளின் மர்ம மொழியில் பொதிந்திருக்கிறது
மூடப்பட்ட காகிதச் சுவர்களின் உள்ளில்
கனத்து உறங்குகிறது
அறைச்சுவர்கள் மற்றும்
அறைப் பொருட்கள் சாட்சிகளாக இருந்தன
எவையும் நேரடி காட்சி சொல்லாது
ஆனாலும் அடையாளங்களைச் சுமந்து கொண்டிருக்கும்
தடுமாற்றமும் அதற்கு ஈடு செய்வதாக இருக்கிறது
அதன் வெற்றிடத்தை நிரப்புவதாக இருக்கிறது
என்னையொத்த
என் வயதை மீறின
எவரின் வார்த்தைகளும்
பொருத்தமற்றதாகவே
பிரபஞ்ச மூலையில் என்னைப்போல் எழுதும்
ஒருவனின் மையின் ஈரமுலராத வார்த்தைகள்
என் வாக்கியத்தை நிரப்புவதற்காக
வெற்று வெளியில்
அலைந்தும் திரிந்தும்.. ”(பக்கம்107)

விஷயம் கூறலாக /விரைப்பாக/ வெளிப்படையாகவே. இறுதி ஒன்பது வரிகளில் சொல்வதற்கு வேண்டப்படும் வார்த்தைகள் பற்றி ; வேறொரு தளத்தில் நீட்சியாக; சொல்லித்தராத துரோகம் சொல்லிவிடமுடியாது போவதாக; உள்ளபடியே துன்பத்தை பேசி விட இயலுமா/ முற்றிலுமாய் சொற்கள்தான் போதுமா /கிட்டுமா அனுபவம் உணர்வை அதன் வீச்சு கெடாது சொல்ல வழி /நிகழ்வு நேரிடுவது ; அப்படியே உரைக்க வார்த்தைகள்.

இந்த அய்ந்து கவிதைகளுடனேயே இணைக்கப்பட இன்னும் சில கவிதைகளும் உண்டு. இவற்றைப் படிக்கையில் நாவலுக்கான விசயமாக இருப்பதை உணர முடிந்தது. தன் வரலாற்றுச் சம்பவங்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக தன்னிலையில் . எதார்த்தமாக நாவலாகப் பெற்றிருந்தால் சிதறாமல் பூர்ணம் கொண்டிருக்குமோ பொருள்.

சுப்ரபாரதிமணியன் அப்பா அம்மாவை நினைவுகூர்ந்து எழுதியிருக்கும் இரு கவிதைகள், பனியன் நகரம் பற்றிய ஒரு கவிதை., பேசி என்ற தன் பணி சார்ந்த கவிதை மற்றும் சுற்றுச்சூழல் அக்கறை கொண்ட கவிதைகள் எல்லாமே குறிப்பிட வேண்டியவை தான். ஒரு தொகுப்பில் 5 கவிதைகள் இருந்தாலே எதேஷ்டம் . ஒரு கவிஞன் 10 கவிதை எழுதி விட்டால் உத்தமம். இந்த கட்டுரை பேசுவது இன்றியமையாதவொரு வகைமைக்கவிதைகள் குறித்து மட்டுமே; அவற்றின் விஷயம் தொந்தரவுகள் செய்வதாலேயே ; தனித்த ஒன்றாக விளங்குவதனாலேயே. வாசகன் அறிவான்.

( நூல்: சுப்ரபாரதிமணியன் கவிதைகள்

ஆசிரியர் சுப்ரபாரதி மணியன்

வெளியீடு: காவ்யா

16 இரண்டாம் குறுக்குத் தெரு ; டிரஸ்ட்புரம்; கோடம்பாக்கம்; சென்னை
விலை: 100 )

(விக்ரமாதித்யன்னின் “ காடு திருத்தி கழனியாக்கி – (நக்கீரன் வெளியீடு ) நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரை )

 

 


 

About the author

நுட்பம் - கவிதை இணைய இதழ்

நுட்பம் - கவிதை இணைய இதழ்

கவிதை வெளிப்பாட்டின் மூலம் ஒரு மொழியின் பன்முகத்தன்மையை வெளிக்கொணர இயலும் என்ற வகையிலும், புதிய புதிய கவிதை பரிணாமங்களை வெளிப்படுத்தும் படைப்பாளர்களுக்கு ஒரு களமாக இந்த இணையதளம் இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளத்தின் பொறுப்பும் நிர்வாகமும் இரா.சந்தோஷ் குமார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website