cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 5 விமர்சனம்

சோழநிலாவின் சலனமற்ற நதியின் இசையோவியம்


ப்போது நாம் கொரோனா எனும் கொடுங்குகையின் நான்காவது அலையின் வாசலுக்குள் செல்வோமா இல்லையா என்ற ஊசலாட்டத்தில் இருக்கிறோம் இல்லையா? ஆனால் இக்கொடிய தீநுண்மி பாரிய அளவிலானோரைக் கொன்றும், பலரது வாழ்வினை நிர்மூலமாக்கியும் துயரார்ந்த ஆட்டத்தைக் கடந்தாண்டுகளில் ஆடியபோது நாம் இப்படியெல்லாம் உலகம் அதிரும் என எதிர்பார்த்திருக்க மாட்டோம் இல்லையா? ஆம். காலம் பல புதிர்களை இந்தப் பிரபஞ்சம் எங்கும் ஒளித்துவைத்து வேடிக்கை காட்டுகிறது.

Lockdown Lyrics (கொரோனாக்கால கவிதைகள்) என மறைந்த பேராசிரியர் கே. பாலசுப்ரமணியம் அவர்கள் 103 தமிழ்க் கவிதைகளைத் தேர்வு செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழ் ஆங்கிலம் இரு மொழியிலும் கொண்டுவந்த நூல் இத்துயரார்ந்த தீநுண்மிக் காலத்தை அடையாளப்படுத்திய ஒரு அற்புதமான புத்தகம். தோழர் லதா ராமகிருஷ்ணன் அவர்கள் இந்த நூல் உருவாக்கத்தில் உடனிருந்த கடும் பணியாளர். 103 கவிகளில் எனது கவிதையொன்றும் இடம்பெற்றதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். தோழர் சோழநிலாவும் அப்படியான தீநுண்மிக்காலத்தின் துயரங்களை “சலனமற்ற நதியின் இசையோவியம்” ஆக்கியுள்ளார்.

காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்வது வரையான நேரங்களுக்குள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் மனங்களுக்கு தங்களைச் சுற்றியுள்ளவற்றை அவதானிக்க நேரமற்று இயந்திரகதியில் இயங்கிக் கொண்டே இருந்தார்கள். அவர்களுக்கு இந்த முடக்கக் காலம் கொஞ்சம் இளைப்பாறலைக் கொடுத்ததாகவே நான் பார்க்கிறேன். சோழநிலா அந்தத் தருணத்தைக் கவிதைகளாக்கிவிட்டார். சாளரக் கம்பிகள் வழி உள்ளேகும் வெளிச்சத்தை, மின்விசிறியின் நிழலை, தனியே நிற்கும் நெடுஞ்சாலையை, அரசியல் பேசாத தேநீர்க்கடை இருக்கை, முகக்கவசங்களுக்குள் ஊசலாடும் மூச்சுக்காற்றை என பல்வேறு அவதானிப்புகளைக் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.

“அறையெங்கும்

நான்கு வரி கோடு போட்ட குறிப்பேடு போல்

சாளரக்கம்பியின் வெளிச்சம்” எனும் கவிதை சிறந்த உதாரணம்.

மனித அறிவு அண்ட சராசரங்களையும் ஆட்டுவிக்கும் அசாத்தியம் கொண்டது என நாம் நம்பிக்கொண்டிருந்த வேளையில் காற்றுவழி ஒரு தீநுண்மி எல்லாவற்றையும் கையறு நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியதை மறுக்க முடியாது. ஆனால் எல்லாவற்றையும் கடந்தும் ஒரு வாழ்வு இருக்கத்தானே செய்கிறது.

“சல்லடைக் கண்களால் சலித்தும்

காற்றை வடிகட்ட முடியவில்லை” என்கிறார். வீசும் காற்றில் விசம் பரவட்டும் என்ற கவியின் சொல்லுக்குத்தான் எவ்வளவு சக்தி பாருங்கள்.

“அதிகாரங்கள் நிலையானதல்ல

நீரின் உப்புக் கரைசல் போல்

கரைந்து போகும்” எனத் துயரங்களைச் சுமந்து புலம்பெயர்ந்த மக்களின் வாழ்வில் சிறு நம்பிக்கை ஒளியை காட்டுமாற்போல் சொல்கிறார். அரசு அதிகாரங்களை ஆட்டம் காணவைக்கக் கூரிய ஆயுதங்கள் தேவையில்லை இப்படி அவர்களை நிலைகுலையச் செய்யும் சொற்களே போதுமானதாக இருக்கின்றன.

“தனித்திரு-விழித்திரு-விலகியிரு

கண்கள் மூடியபடி இருக்கிறான்

புத்தன்”

எனும் இதே கவிதையில்

“தடைகளுக்குப் பயந்து இப்போது

குரோட்டன் செடிகளுக்கிடையே

ஒளிந்திருக்கிறான்” என்கிறார். கொரோனா புத்தனையும் பிள்ளையாரையும் மற்றும் பல ஆயுதம் தரித்த சாமிகளையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இது எப்படி அறமாகும்? மனிதர்கள் கடவுளர்களை தங்களின் நம்பிக்கைக்காக உருவாக்கிவிட்டுக் காப்பாற்ற வரவில்லை என்ற காரணத்தினூடாக மறுதலிப்பது ஒருபோதும் அறமாகாது. ஆனாலும் சாமானியர்களுக்குப் பீடங்களில் வீற்றிருப்போர் காப்பாற்றுவார்கள் என ஆண்டாண்டு காலமாக நம்பவைக்கப்பட்டு வந்ததை உடனே மாற்றிவிட முடியாதுதானே? ஆனாலும் இனியொரு விதி செய்துதானே ஆகவேண்டும்.

“அவர்கள் ஆணிகளைச்

சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்

சவப்பெட்டி தயாரிக்க

இங்குக் காகிதக் கப்பல் செய்து

காத்திருக்கிறாள்

இசைப்பிரியா” என்கிறார்.

கார்ப்பரேட் முதலாளிகளின் பேராசைகளால் உலகம் எல்லாம் சவக்காட்டில் வரிசையில் நின்ற காட்சிகள் அவ்வளவு எளிதாக மறந்துவிடாது. அப்படியான பேரழிவினை நவீன உலகம் கடந்த காலங்களில் கண்டது. இன்னும் தொடருவதற்கான சாத்தியங்களும் இருக்கவே செய்கின்றன. இந்த பாழ் அரசியல் நகர்வுகளுக்கு அப்பால் சலனமற்று ஓடும் நதியில் காகிதக் கப்பல் விட்டு மகிழும் குழந்தைகளின் உலகம் தனியானது. இசைப்பிரியா இங்கே குழந்தைமையின் குறியீடு. இவர்களின் எதிர்காலத்தை, கனவுகளை அவர்கள் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

“காலம் நமக்கானது அல்ல அவர்களுக்கானது

முகக்கவசம் அணியுங்கள்” என விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.

இதேபோல் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்ட மருத்துவமனை, பேருந்து நிலையம், பேருந்து என பலவற்றையும் கவிதைகளாக்கியுள்ளார்.

“இருக்கைகளை நிரப்பியிருக்கும் காற்றைக்

கழுவ முடியவில்லை”

“வழியனுப்ப வருவோரின் கையசைப்பு

வீடடங்கியிருக்கிறது”

என்ற வரிகள் சோழநிலாவை தனித்துவப்படுத்திக் காட்டும் கவிதை வரிகள் என்றால் மிகையாகாது.

 

“இரத்தம் ஒழுக அறையப்பட்டிருக்கும்

யேசப்பா பாவம் என்று

ஆணியைப் பிடுங்கி விடுவிக்க

கையில் சுத்தியை தரச்சொல்கிறார் மகள்…

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்

தொழுவத்தில் பிறந்தவர்

இப்போதுதான் உயிர்தெழுகிறார்.”

குழந்தைகளிடம் மட்டுமே நாம் இந்த ஈரலிப்பான மனதைக் காணமுடியும். அவர்களுக்காகவே நாம் இந்த உலகை மாசின்றி கையளிக்க வேண்டும்.

எழுத்துப் பிழைகள், வாக்கிய முறிவுகள், சில கவிதைகளில் காணப்பெறும் முரண்பாடான தொக்கல் போன்றவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் சலனமற்ற நதியில் தெள்ளிய ஓவியத்தின் இசைக்குறிப்புகளை நிச்சயம் காணலாம். உதிரியாய் நிற்கும் பாட்டாளிக்கு என் வாழ்த்துக்கள்.

ஆசிரியர் குறித்து
இவர் கும்பகோணத்தைப் பிறப்பிடமாகவும், கோவை பொள்ளாச்சியை வசிப்பிடமாகவும் கொண்டவர். மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். கருந்துளை என்ற சிற்றிதழை வெளியிட்டுள்ளார், யாழ் எனும் பெயரில் பதிப்பகமும், தீ இனிது இலக்கிய இயக்கம் என்ற அமைப்பையும் தொடர்ந்து நடாத்தி வருகிறார். தற்சமயம் கோவை தமுஎகச இலக்கிய அமைப்பு கோவை படைப்பாளிகளில் ஒருவர் என கௌரவப்படுத்தி விருது வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நூல் விபரம்

நூல்: சலனமற்ற நதியின் இசையோவியம்

ஆசிரியர்: சோழநிலா

பதிப்பகம்: யாழ் பதிப்பகம், பொள்ளாச்சி

பக்கம்: 64

விலை: ₹70

முதல் பதிப்பு: நவம்பர்-2020

இரண்டாம் பதிப்பு: பிப்ரவரி-2022.

தொடர்புக்கு: 80566 88643.

About the author

சுகன்யா ஞானசூரி

சுகன்யா ஞானசூரி

இலங்கையின் யாழ்ப்பாணம் மாகாணத்திலுள்ள அச்சுவேலி வடக்கில் பிறந்த ஞானசூரி முதுகலை அறிவியல் நுண்ணுயிரியல் துறை படித்தவர். 1995இல் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கும், 1996இல் வன்னியை விட்டு தமிழ்நாட்டுக்கும் புலம்பெயர்ந்தவர். தற்போது திருச்சிராப்பள்ளியிலுள்ள தனியார் ஆய்வகத்தின் நுண்ணுயிரியல் துறையில் தொழில்நுட்புனராகப் பணியாற்றுகிறார்

இவரது முதல் கவிதைத் தொகுப்பு : அலைகளின் மீதலைதல் (2008) , இரண்டாம் கவிதைத் தொகுப்பு : நாடிலி (2021)

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website