கவிதை எழுதும் எல்லோருக்கும் மொழி தான் உயிர். அந்த மொழி உயிராகி, உடலாகி ஒரு தொகுப்பில் வாசிக்கக் கிடைக்கும்போது அதன் அர்த்த பரிமாணங்கள் நாம் காணாத பிரபஞ்ச அழகியலைப் போலவே காணக் கிடைக்கிறது. வெவ்வேறு நிலவியல் காட்சிகளோடு அதன் உயிர்க் கோளங்களையும் இணைத்துக் கொண்டு படைப்பவரின் உளவியல் சார்ந்த உள்ளார்ந்த அறிவுடனும் தெளிவுடனும் படைத்து அளிக்கும் போது அந்த தொகுப்பு நுட்பமாக கவனித்து வாசிக்க வேண்டியுள்ளது.
தேன்மொழி தாஸின் ஆறாவது கவிதை நூலான வல்லபியை வாசித்துக் கொண்டிருக்கும்போதே மேற்கண்ட நினைவு அலைகள் எனக்குள் ஓடிக் கொண்டிருந்தன. காடறிந்த பசுமையாக இவரது மொழி இத் தொகுப்பில் நிலை கொண்டுள்ளது. இவரது முந்தைய தொகுப்பான காயாவின் சில கவிதைகளை டெய்லிஹன்ட்டில் வாசித்திருக்கிறேன்.
அதில் எனக்குப்பிடித்த வரிகள் சில உள்ளன.
வரையாடுகளின் சினைப்பருவ காலத்தை/ வனாந்தரம் மறைத்து வைப்பது போலவே/ தளிருடலை மறைத்து வைக்கத் துவங்கினேன்- ( காயா )
அதுபோலவே தோற்றம் கொள்கின்றன இந்த கவிதையின் வரிகளும் அச்சம் அகக்கிருமி என்ற கவிதையில்…
”வெந்தயப்பூ பசும்பொன்னுக்கும் மேலானது
அச்சம் அகக்கிருமி
குணப்பிழை நட்பிற்கு ஆகாது
கைச்சுழி வெள்ளாமை தருமோ
கருங்காலி மரத்தின் ரத்தம் காடுகளுக்குள்
கேவுவதை மனிதன் அறிவானோ
போழுதுகட்டுதல் மேகத்தின் தொழிலாகுமோ
முறுகுபதம் நீராகுமோ
காடுபடு திரவியங்களை விலாக்கொடி அணியுமோ
பெரும்பெயல் செயற்கையில் வாய்க்குமோ
பயனுவமை காடறியாது “
கவிதை மொழியை முழு வீச்சில் அள்ளித்தரும் வரிகள் இவை. கவிதைக்கான உயரம் எதுவென்று சொல்ல வாய்ப்பதில்லை. நாம் தேடும் மொழி எங்கோ ஒரு காட்டுப் புதரில் அல்லது கண்காணாத இடத்திலெல்லாம் இருந்து கொண்டேதான் இருக்கிறது . அன்பின் மறைபொருள் நுண்மொழியாய் கசிவதில் வியப்பேதுமில்லை. அதை ஒரு பட்டாம்பூச்சியாய் பறந்து அல்லது கூடு விட்டு கூடு பாயும் வித்தை போல் பயின்று வர வேண்டும்.
“ நித்திரையடையாமல்
இமையினுள் உருளும் காதல் கண்களுக்கு
கடுகுத் தோலின் மினுமினுப்பு.”
காதலையும் அணு முதல் அண்டம் வரை அளக்கலாம் என்றால் இந்த வரியும் காதலை அளந்து பார்த்துக் கொண்டாடித் தீர்க்க வேண்டிய வரிகளதான்.
”முத்தத்தின் மாயவெப்பம்
பெருமூளையின் அரைக்கோளங்களில்
விளையாடும் பரிசுத்த ஆவி”
காதலில் ஐயமில்லை என்றால் இவ்வரிகளும் சாத்தியம் தான்.
மலைராணிப் பூக்கள் என்ற கவிதையில் தேனீக்களின் ரோமக்கால்களே அதி இசையைப் படைத்தன / இறகுகள் இயற்கையின் பறை என்ற வரிகள் கவிஞரின் இயற்கையின் மீதான தன் கவிப்புலனோடு தன் செவிப்புலனையும் இணைத்தே வைத்திருப்பது கவிதையின் காட்சி மற்றும் ஓசை நுட்பத்திற்கு ஒரு சான்று. இந்த கவிதையில் மேலும்மேலும் காட்சிகளை நுட்பமாக்கும் பல வரிகள் காணக் கிடைக்கிறது. அது இயற்கையின் மீதான நமது புலன்களையும் விரிவடையச் செய்வதாகவே இருக்கிறது.
“A perfect virgin murder
ஒரேமடிப்பில்
அவள் உடல் தலையற்று இருந்தது
அடுத்த பக்கம் இருந்த கழுகின் தலை
சரியாக அவள் கழுத்தில் பொருந்தும் நேரம்
வெள்ளை ரத்தம் வெளியெங்கும் வடிவதை
நிறுத்தமுடியவில்லை
நீங்கள் எதிர்பாராத இசையை
காற்று இதன் மேல் அடிக்கிறது
இக்கொலை லேசாக பறக்கிறது
Cut another paper to do second murder “
இது போன்ற பரிசோதனைக் கவிதைகளையும் இத் தொகுப்பில் சேர்த்துள்ளார்.
” கைவிடுதல்
கொய்தல்
கொலைநகம் வளர்த்தல்
கூட்டுக்கால் கட்டுதல்
குரல்வளை கசக்குதல்
அகம் சிதைத்துப் பிடரி உயர்த்துதல்
அதிமதுரக் குரலால் தூபம்காட்டுதல்
அரிதாரம் பூசுதல்
அளவு குறித்தல்
ஏதும் என்னிடமில்லை
எனது நிலத்திற்கான நித்திய வைராக்கியம்
உயிர்ப்பித்துக் கொண்டேயிருக்கிறது
நான் என்பது
தனது இயல்மொழியை விட்டுவிடாத
சிவகரந்தைப் பூவாகக் கூட இருக்கலாம்.”
தனது இயல் மொழியில் இவ்வளவு உறுதியாக நின்றுகொண்டு மேகப் பிஞ்சுகளை நம் கையில் தவழ விட்டுப் பார்க்கிறார் தேன்மொழி தாஸ். சில பிறை நிலாக்கள் அதில் மீன்கள் போலவே துள்ளுகின்றன.
“மஞ்சள் பூசணி சமைத்து
சூரியனுக்குப் படையலிட்டு நிமிரும்
பெண்ணின் முந்தானையில்
சிறுவாடாகச் சேர்த்த சில்லறைகள்
பிரார்த்தனைகளாக வீழ்கின்றன”
தை என்ற கவிதையில் இந்த வரிகளால் அழகூட்டும இவரே இந்தக் கவிதையில் இதற்கு முரணான காட்சிகளையும் வைத்து வாழ்வின் எதிர் எதிர் பக்கங்களை நினைவு படுத்துகிறார். இதுவே யதார்த்தம் என்பது போல் கவிதைக்கான சொற்கள் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
தருவதற்கும் பெறுவதற்கும் இடையேயான ஒரு இடைவெளியில் இவரது மொழித்திறன் அலாதியானது. அதுவே இவரது கவிதா விலாசம். மேன்ட்டீஸ் பூச்சிகளின் நடனத்தை இவரது விழித்தாளில் குறித்து வைப்பது போல் கவிதைகள் இதுவரை தமிழில் வெளிவந்துள்ளதா என்று தெரியவில்லை..
நீர்மை மிக்க ஸ்தனங்களின் கண்களை/ மணலென மிதித்துக் கடப்பவனுக்கு / உடலெங்கும் பூரானின் கால்கள்..
வார்த்தைகளின் வீரியம் ஒரு கொடிய விஷம் போல் இறங்குகிறது.இருப்பினும் மனிதன் தனது தந்திரங்களையும் சேர்த்தே இந்த பூமியில் விதைக்கிறான். அதை அழிக்கும் சக்தி இயற்கயைப்போலவே தன் மொழிக்கும் உண்டு என்பதை நிரூபிக்கிறார்.
“அம்மா கனவில் வருகிறாள்” என்ற கவிதை இந்த தொகுப்பை வாங்கி படிக்கச் சொல்லும்.அந்த அளவுக்கு அம்மாவிடமிருந்து பெரும் பேறுகளை வரிசைபடுத்தி வைக்கும் இவரது கவிதை வரிகளை மீண்டும்மீண்டும் வாசித்து இன்புற்றேன்.
வெறும் காட்சி சட்டமாக இல்லாமல் நிலம் கீறி வெளிவந்த விதைபோல் இவரது சொற்கள் முளைத்து எழுகையில் மனதில் ஒரு பரவசம் தொற்றிக் கொள்வதாகவே உள்ளது. காட்சி சித்திரங்களில் கண்டெடுத்த மொழிகளை கவிதையாக நெய்துமுடிக்கும் இவரது மொழியின் வாசனையை அந்தக் காடே அறியும் என்பது போல் இவரது தொகுப்பில் ஒளிரும்மொழியின் ஒளி நடனங்களில் இருந்து பீறிட்டு வரும் வெளிச்சம் காலம் என்ற கடலேறி கவிதையின் திசைவெளியில் தனது முடிவுறாத பயணத்தைத் தொடரவே செய்யும்.
நூல்: வல்லபி ஆசிரியர்: தேன்மொழி தாஸ் பதிப்பகம்: எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) வெளியான ஆண்டு : 2019 விலை: ₹ 150