- பயணத்தின் வட்டம்
பொருள் ஒன்றும் புலப்படாத
நடுநிசியின் இருட்டுபோல்
புதிர்களுடன்
புறப்படத் துவங்குகிறது
ஒரு நீண்ட பயணம்
புலரக்காத்திருக்கும் பொழுதுபோல்
புதிரவிழ்க்க காத்திருக்கிறது.
மிகக் கவனமாய்கோர்க்கப்படும் எண்ணச் சங்கிலிகள்…
எண்ணச்சங்கிலிகள் தடுமாறுமெனில்
தடம்புரளும் அபாயமுண்டு.
துணைக்கிருக்கும் நாளிதழ்களுடன் ஒன்றி விடுதல் போல்
ஒன்றிவிடும் நட்புகள்…
பக்கத்திலமர்ந்து பேசக்கூடாதென கங்கணம் கட்டி விடும் மனிதரென
பக்கத்திலிருந்தும் புரிந்துகொள்ளக்கூடாதென
கங்கணம் கட்டி விடும் சில உறவுகள்…
நெடும் பயணத்தின் தனிமை போக்க
குடும்ப கதம்பங்களின் சுகந்தம் நுகர வேண்டும் எனில்
சிலருக்காய் வளைந்தும்
சிலரிடம் நெளிந்துமாய்
கடக்கும் வருடங்கள்…
திறக்கும் போதெல்லாம் வந்துபோகும் கழிவறை நாற்றங்களென
கடந்தாக வேண்டிய
கட்டாயத்தில் சில நிகழ்வுகள்…
எல்லோருக்கும்
ஜன்னலோர பயணம் வாய்ப்பதில்லை
சிலருக்கு வெளிர் நீலவானின் வெளிச்சக் கீற்றாய்…
பலருக்கு எப்பொழுதும்
குகைக்குள் நுழையும் பயணத்தின் கும்மிருட்டாய்…
சுகங்களிலும்,ஆயாசங்களிலும்
அலைக்கழிந்து
வியாதிப்பைகளுடனும்
நினைவுப்பெட்டிகளுடனும்
இறங்க தயாராகையில்
ரயில் பயணத்திற்கும்
வாழ்வு பயணத்திற்குமான
சிறு முரணொன்று முட்டி நிற்கிறது
முன்னதில் இறங்கும் நேரமும் இடமும் துல்லியமாய் தெரிவதுபோல்
பின்னதில் தெரிவதே இல்லை
நல்லது.
பயணத்தின் வட்டத்தில்
புதிரவிழ்க்க தெரியாமல் இருப்பதே
நமக்கும் நல்லது.
♦”காலடித் தடங்கள்”தொகுப்பில் இருந்து
- சாம்பல் நிறப்பூனை
பள்ளியில் நடந்த போட்டி
ஒன்றுக்காய் உருப்போடும்
ஒரு நாள் அது.
வீட்டில் குறுக்கும் நெடுக்குமாய்
“வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்”
என்ற மாகவியின் பாடலை…
“சாம்பல் நிறத்தொரு குட்டி” என்று
உரக்க கத்தும் போது வந்து வாலாட்டி நின்றது
அம்மா வளர்க்கும் “சாம்பல் நிற பூனைக்குட்டி…”
“ச்சே,இப்படித் தானா தொந்தரவு செய்வது”
அம்மா நான் போட்டிக்காக தயாராகையில்
என்னதிது தூக்கி போடுங்களென
கத்திக் கொண்டே
மறுபடியும்
“வெள்ளை நிறத்தொரு பூனை கண்டீர்”
குறுக்கும் நெடுக்குமாய்…
இதற்கெனவே காத்திருந்த தம்பி
எங்கோ சாக்கில் கட்டி விட்டு வர
இங்கே இன்னும் முடியவில்லை
“அவை பேருக்கொரு நிறமாகும்”
ஏற்ற இறக்கத்துடன் கர்ஜனையாய்
கையாட்ட
“சாம்பல் நிறத்தொரு குட்டி
கருஞ்சாந்தின் நிறமொரு குட்டி”
என்று முடிப்பதற்குள் எங்கிருந்தோ
விட்ட இடத்தில் இருந்து வந்து விட்டது அது…
இப்போது நான் எந்த வரியை விட்டேன்
நினைவில் இல்லை…
பாரதி கவிதைக்குப் பதிலாய் அன்று
கருணையை பரிசளிக்க
நடை நிறுத்தி மடி கிடத்திக்
கொண்டேன் கால் சுற்றி நடக்கும் அதை!!
“காலடித் தடங்கள்”தொகுப்பில் இருந்து
- துக்கத்தின் நாவுகள்
தொண்டையில் நிறுத்தி வைக்கப்பட்ட
நெடுநாள் துக்கங்கள் ஆலகாலமென
வடிவமெடுத்த போது
தீண்டிய அரவத்திற்குமான மதிப்பிழந்து முறிவுக்கான கட்டும்,மூலிகைகளும்
தேவையற்றுப் போகிற வேளையொன்றில்
அதைக் கொண்டே அதை சரிசெய்யும்
யுக்தியின் கைகளை பிடித்துக் கொண்டு வாழ்வு
வரவேற்கையில் குழம்பி தவிக்கிறது
துக்கத்தின் நாவுகள்!!