நிலைப்படி தாண்டாத
மனத்தின் இடுக்குகளில்
புரையோடிப் போயிருந்தன
களிம்பிடாமல் வைத்திருந்த
இருத்தலின் காயங்கள்..
நித்தமும் எரிந்து
சமைத்துச் சலித்திருக்கும்
அடுப்பில் பொங்கிப்
பரவியிருந்த பாலின் கறையை
சுத்தம் செய்யாமலே
உறங்கச் செல்கின்றாள்
அவள் இரவுகளுக்கும்
விடியல்களுக்குமான
இடைப் பட்ட பொழுதுகளில்
வெகுதூரம் பயணிக்கிறாள்
ஆணிவேர்களை
அலட்சியம் செய்து விட்டு
உதிரும் இலையென
இலகுவாய் மிதந்து
காற்றில் அலைகிறாள்..
காய்ந்த சிறகுகளில்
பெரும் அனல் மூட்டி
கையில் திணிக்கப்பட்ட
வழிகாட்டி வரைபடத்தை
இலக்குகளோடு சேர்த்து
எரித்துச் சாம்பலாக்குகிறாள்
நிலவற்ற அடர்காட்டில்
மின் மினிப் பூச்சிகளின்
ஒளி பற்றி அடியெடுத்து
நெடுந்தூரம் நடக்கிறாள்..
வாடையில் வெம்மையாய்
வெப்பத்தில் குளிராய்
மழையில் வேட்கையாய்
தனக்குத் தானே இயற்கையை
தகவமைத்துக் கொள்கிறாள்
பயணத்தின் முடிவில்
பால்வீதி தென்படுகிறது.
நீந்த யத்தனிக்கும் முன்
விடியலின் ஒளி வீச்சில்
நிறம் மாறியது பாதைகள்..
கரி துடைக்கும் துணியால்
பால்கறையை சுத்தம்
செய்து கொண்டிருக்கிறாள்
கனவு நீங்கிய தருணங்களின்
சாயல்கள் சிறிதுமற்று..
எழுத்து பிரசுரம் ( Zero Degree Publishing) வெளியீடாக 2019-ஆம் ஆண்டு வெளியான லதா அருணாச்சலத்தின் “உடலாடும் நதி” கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதை இது.
Published with permission of the author, Latha Arunachalam