மேகத்துக்கு மேலேயும்
ஒரு பறவை
பறந்தது
பறவைக்கு கீழேயும்
ஒரு வானம் இருந்தது
தூரத்து அகல் விளக்கில்
இரு விட்டில்கள்
துடித்து கொண்டிருந்தன
எனக்கு அகல் பிடிக்கும் என்றாய்
எனக்கு விட்டில்கள் என்றேன்
ஏனென்றாய்
விட்டில்கள் ஒரு போதும்
ஆறாம் அறிவோடு யோசிப்பதில்லை
மரணத்தின் ஒளியை
ஆனந்தமாய் முத்தமிடுகின்றன
“ஆஹாங்”
தலையாட்டி இரசித்தபடியே
கருகிய விட்டிகளில் ஒன்றை
கைகளில் தந்தாய்
அகலும் பிடிக்கும் என்றேன்,
வியப்போடு பார்த்தாய்,
அகல் தான் இரவுக்கும் பகலுக்குமான
இரகசிய ஒப்பந்தத்தை உடைக்கிறது,
இந்த குறைந்த ஒளியில் தான்
உன் கண்கள்
கனிந்த நாவல் பழத்தைப் போல
மேலும் கனிவை சுரக்கின்றன,
சிரிக்கத் தொடங்கினாய்
இடைவெளியின்றி,
சில விட்டில்கள் கருகிய மணம்
காடெங்கும் பரவியது.
பரிதி பதிப்பகம் வெளியீடான முருக தீட்சண்யாவின் “நீர்மையின் சாம்பல் சித்திரங்கள்” கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதை இது.
Published with permission of the author, Muruga Deetchanya
அருமை
அருமை❤️