cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 4 கவிதைகள் நுட்பம் - இதழ்கள்

முபீன் சாதிகா கவிதைகள்


1.டெல்யூஜிடம் நிறம் குறித்துக் கேட்ட போது

 

வன்கொடிய வண்ணச் சாயலும் கோடும்

கிளர்த்திய மூர்க்க விளம்பலில்

காயம் பொதிந்து ஊறும்

குருதிக் குளம்பு

 

விசையுறு சேர்க்கை ஒளிந்து உருவாய்

புகையும் கவியும் இருள் வழக்கு

பார்வை அவிந்து திறக்கும்

கருமை வீச்சு

 

ஒளி உமிழும் கங்கு என்றே கற்றையில்

நகையும் பொலிந்து கனக்கும் ஓடையில்

சாயம் கனிந்து ஈர்க்கும்

மஞ்சள் குழைந்து

 

மிசைவெளி நிறையும் ஊற்றின் திருவில்

நிறமற்றதின் திரவத்து வடியும்

தூவும் சிறு மழையில் துவங்கி

நீலம் பார்க்கும் கலத்து

 

கனலும் சக்தியில் கறையும் வெப்பத்தில்

உயிரற்றதும் இணையும் சக்கரத்தில்

எல்லையும் எல்லையற்றதும் இடம் மாறி

வெண்மை மலிந்து

வண்ணச் சாயல்கள்

உடல் வரி மிதந்து

கரையும் கரையா வடிவச் சிதறலில்

உள் நரம்பு

உணர் பொருள் கொள்ளும்

என டெல்யூஜ் உரைத்தார்.


 

2.பிள்ளைக் கனா

 

பாதகம் அறியா

பிள்ளை நெஞ்சின்

தண்ணென்னும் நிழலாய்

குழவி பரிந்து தவிக்கும்

முழவாய் பெருங்குரலில்

கண்ணீரும் சொறிந்து

சிறுமென் பாதம் குழைந்து

சித்திரச் சுகமதை

மகிழ்ந்தும் அவிழ்ந்தும்

இன்பத்துத் துன்பமாய்

எதிரெதிர் இடறில்

மறக்கும் பார்வை

துதித்த பொறி என

மதிக்கும் வெளியில்

தவழும் மழலையின்

படர்ந்த பீலியாய்

துயிலும் கனா.


3.பரவும் பா

 

வயல் துள்ளும்

கயலின் நீர்த்துளி

கண்ணில் படர்ந்து

திரையிடும் சமயம்

வெளுக்கும் வானத்து

துண்டென இறங்கும்

மதியப் பொழுதின் நிலாவும்

கதிரின் விளிம்பில்

கனத்து முகிழும்

மணியென பெய்து

தாகமும் நாதமும்

கலக்கும் கோர்வையிலும்

மணம் பரவும்

பாவாய்


4. எதுவாய்

 

பூவென்று முகமாய்

மலரென்று சுகமாய்

காற்றென்று ரசமாய்

கனத்தது இதழில்

 

மெய்யென்று பதமாய்

நினைவென்று கணமாய்

திறமென்று புறமாய்

வளைந்தது கனவில்

 

சாறென்று கனியாய்

விளைவென்று தனமாய்

மரமென்று விதையாய்

முளைத்தது பனியில்

 

வீணென்று இதமாய்

மேலென்று நயமாய்

தானென்று நீயாய்

உறைந்தது எம்மில்


 

About the author

முபீன் சாதிகா

முபீன் சாதிகா

தமிழ் இலக்கியத்தில் முதுகலையும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். தற்போது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை முடித்திருக்கிறார்.

'அன்பின் ஆறாமொழி,' மற்றும் 'உளம் எனும் குமிழி' ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. '
உறையும் மாயக் கனவு' என்ற தலைப்பில் இவரது நேர்காணல் நூலாக வந்திருக்கிறது.
இவருடைய படைப்புலகம் பற்றிய நூலும் வெளிவந்திருக்கிறது. 40 தமிழ்ப் பெண் கவிஞர்களின் படைப்புலகம் குறித்து இவர் தொகுத்த நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய இதழ்களில் வெளிவந்த இவரது கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப் பெற்று நூலாக வெளிவந்திருகிறது. சமீபத்தில் ‘நூறு புராணங்களின் வாசல்” என்ற இரு குறுங்கதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

இவர் ஆங்கிலத்திலும் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் பல தேசிய சர்வதேச இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. உலக பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பில் இவருடைய ஆங்கிலக் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்கிலத் தொகுப்பு ஒன்றில் இவரது கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.

பல்வேறு தேசிய சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று பெண்ணியம் குறித்தும் பின்நவீனத்துவம் குறித்தும் கட்டுரை வாசித்திருக்கிறார். தமிழகத்திலும் நாட்டின் பல இடங்களிலும் குறிப்பாக போபால், டெல்லி போன்ற இடங்களில் சாகித்ய அகாடமி நடத்திய பல்வேறு கட்டுரை வாசிப்புகளிலும் கவிதை வாசிப்புகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

மலேஷிய கவிஞர்களுடன் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக் கழகத்திலும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் பங்கேற்றிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் சாகித்ய அகாடமிக்காவும் பிற பதிப்பகங்களுக்காகவும் மொழிபெயர்க்கிறார்.

தொலைக்காட்சி சேனல்களில் தயாரிப்பாளராகவும் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். செய்தி வாசிப்புக்கான பயிற்சிப் பள்ளி நடத்துகிறார்.ஓவியங்களை வரைவதில் ஆர்வம் உள்ளது. நூல் அட்டைப் படங்களுக்கான ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

குறியியல் குறித்து இவர் மொழிபெயர்த்த நூல் விரைவில் வெளி வருகிறது. இலக்கிய வீதியின் அன்னம் விருதைப் பெற்றிருக்கிறார். 2019ஆம் ஆண்டிற்கான ’மேலும்’ விமர்சன விருதைப் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
Ragu Nathan

தங்களுடைய கவிதை அருமை

You cannot copy content of this Website