- துளிநீரும் ஆழ்கடலும்
வேலை வேண்டி வேண்டுகோள் அழைப்பு ஒன்று
பழைய தோழியின் புலனத்தகவலாய்…!!!
ஏன்? என்னவென்றெல்லாம்
வினாக்கள் வீசி விசாரிக்க வினாடி இல்லை.
பணி செய்யும் பள்ளியின்
தொலைப்பேசி எண்ணை மட்டும் பகிர்ந்தேன்.
வேறொன்றும் அறிந்திருக்கவில்லை..
வேண்டுகோள் வைத்தவள் வேலையில் சேர்ந்தாள்.
வேர்க்க விறுவிறுக்க…
வேலையின் வேகத்தின் இடையே
சந்தித்த போதெல்லாம்
புன்னகை மட்டும் பகிர்ந்துகொண்டோம்.
அன்று ஏதோ அதிசயமாய்
ஐந்தாறு மணித்துளிகள் நேரம் கிடைக்க.,
அகம் சார்ந்த மனக்குமுறலை அன்போடு பகிர்ந்தாள்.
“தேடி வந்த சம்பந்தம்தான் அவன்.
பார்த்ததும் பிடித்தது..
நிச்சயித்த நாட்கள் தொடங்கி
நிற்காமல் நடக்கும் என் மீதான
உருவகேலி நகைச்சுவைகள்.
எந்தவகையிலும் மகிழ்ச்சியைத் தரவில்லை.
இருந்தும் முதல் காதலாய் அங்கீகரித்து
சிம்மாசனத்தில் வைத்து
அழகு பார்த்தது அப்பாவி மனம்…
வாய்க்கு ருசியாய் நான்
காதலோடு சமைத்ததை வக்கணையாய்..
சாப்பிடும் குணம் இருந்து என்ன பயன்?..
பாராட்டும் குணம் கடுகளவும் இல்லை…
கவனம் ஈர்க்க ஏதேதோ வித்தைகளை வெளிப்படுத்தியும்
அவன் கண்களுக்கு
வித்தைக்காரியாகத் தெரியவில்லை..
நான் கோமாளியாகத் தான் தெரிந்தேன்.
கல்யாண நாள் நெருங்க நெருங்கக்
காதல் கனவுகள் ஏதுமில்லை..
கழுத்தை நெருக்கும் கனவு மட்டுமே.
முன்னாள் இரவு வந்தது
அந்த பேரிடி,
வரதட்சணையாக இன்னும் லட்சங்கள் வேண்டுமாம் …
என்னையும்
என் உடலமைப்பையும் நிறத்தையும்
தராசின் ஒருபக்கத்தில் ஆழத்தில் வைத்து
ஈடாக லட்சங்கள் கேட்டான் அந்த கொடியவன்.
இவன் இல்லாமல் வாழப்போவது
எப்படியென்றெல்லாம் கவலையில்லை.
இருந்தால் நிச்சயமாக வாழமாட்டேன்.
ஒரே முடிவாகக் கல்யாணத்தை நிறுத்தினேன்.
மிகுந்த மன உளைச்சலில்
மூச்சுமுட்டித் தத்தளித்த என்னை
தங்களின் கை நீந்திவெளிவர உதவியது…
குழந்தையோடு குழந்தையாக
மனம் இளகிப் பறக்கிறது.
நன்றி!!! “என்றாள்…
நமக்குத்தான் துளிநீர்
எதிர்நிற்போருக்கு ஆழ்கடல்
என்று உணர்ந்து நெகிழ்ந்த தருணம்..!
- ஒருபக்க காதல்
காதல்!
தண்ணீரின் குணம் கொண்டதோ!!!
எனக்கான இயல்பே காணவில்லை.
அவனுக்குப் பிடித்த பாத்திரங்களின் இயல்பாக மாறுகிறேன்!?
காதல்!
மழலையின் முத்தம் போன்றதோ!!!
சரியாகக் கிடைக்கவில்லை..
சிறு தீண்டலும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது?!
காதல்!
நோய்களின் பிறப்பிடமோ?!
என் முற்போக்கு சிந்தனையை
மூளை சாவடையச் செய்கிறது…!!
தீராத வாயாடி இவளைத் திக்குவாயாகுகிறது…!!
காதல்!
உணர்வுகளின் சர்வாதிகாரமோ?!
என் ஜனநாயகத்தைப் பறித்து.,
காதல் கூலி கேட்கும் கொத்தடிமையாக்குகிறது?!!
காதல்!
செய்யாத தவற்றுக்குக் கிடைத்த
தூக்குத் தண்டனையா?
பெரியாரின் பேத்தி இவளை.,
சுயமரியாதை மறந்து
கழுத்தை இறுக்கித் தொங்கவிடுகிறது!?
காதல்!
பெண்ணின் ஒருபக்க காதல் என்பது
எழுவர் விடுதலை போன்றது.
தவறே செய்யாவிட்டாலும் தண்டனை நிச்சயம்.
இங்கே அவளின் அன்பு புரிந்து கொள்ளப்படுவதில்லை.
நடத்தை சந்தேகிக்கப்படுகிறது?!
இங்கே ஒன்று ஆண் கெட்டவனாக இருந்தால்
அவள்
உபயோகப்படுத்தப்படுகிறாள்!
நல்லவனாக இருந்தால்
தூக்கி எறியப்படுகிறாள்!
சுயமரியாதை இழந்த காதலில்
உன்னிடத்தில் அவன் சுகமாயிருக்கலாம்….
அவனிடத்தில் நீ சுமையாகிப் போவாய்.
மறவாதே!! பெண்ணே!!!….
- கண்டிப்பு
அறியாத பருவத்தில்
சிலேட்டு சுவைத்ததால்
பொத்துக்கொண்டு வந்த தந்தையின் கண்டிப்புகள்
அக்கரையில் சேர்ந்தது…!
எட்டனா ஒரு ரூவா எடுத்து
கடைசியில் 100ரூவா திருடி
மிட்டாய் சாப்பிட்ட போது
தந்தையின் கண்டிப்புகள்
ஒழுங்குபடுத்துவதில் சேர்ந்தது…
பள்ளியின் பரீட்சை தாளில்
அம்மாவின் கையெழுத்துப் போட்டு
மாட்டிக்கொண்ட போது
தந்தையின் கண்டிப்புகள்
என்னைத் திருத்துவதில் சேர்ந்தது…!
அறியும் பருவத்தில்
மது அருந்துவதைக்
கேட்க ஆரம்பித்தபோது
மகளின் கண்டிப்புகள்
படித்த திமிரில் சேர்ந்தது…!
குடித்துவிட்டு அம்மாவை அடிப்பதை நிறுத்த வேண்டும்
என்ற போது
மகளின் கண்டிப்புகள்
அப்பனுக்கு அடங்காதவளில் சேர்ந்தது…!
அம்மாவின் ஊதியத்தை வாங்கி செலவழித்து
அழிப்பதை நிறுத்த வேண்டும்
என்ற போது
மகளின் கண்டிப்புகள்
உறவை முறித்துச்
சேர்க்கவே முடியாமல் போனது…!