1.பூனைகள்
அம்மாவுக்கு பூனைகளே உலகம்.
அப்பாவின் உலகிற்குள் நுழைந்துவிடாத
பூனைக்குட்டிகளை அம்மா வளர்த்தாள்.
அப்பா வீடு நீங்கும் பொழுதுகளில்
முதலில் வரவேற்பறைக்குள் வந்தது.
பின்னொரு நாளில்
படுக்கையறைக்குள்.
பூனைக்காரி என்று ஊர் சொன்னபோதும்
அம்மா பூனைகளுடன் வசிப்பதை நிறுத்தவில்லை.
ஊர் உறங்கும் ஓர் இரவில்
அப்பா மறைந்து போனார்.
அப்பாவின் உடலை ருசித்த பூனைகள்
அன்றிரவு அவரது உயிரையும் ருசித்தன
என்பது யாரும் அறிந்திடாத ரகசியம்.
2.மாற்றம்
யானைகளைக் கொல்வது எளிதாகிவிட்ட
இக்காலத்தில்தான்
எறும்புகள் தங்களுக்கு தந்தங்கள்
வளர்ந்திருப்பதை கவனித்தன.
வலிமையிலிருந்து வலிமையின்மைக்கும்
வலிமையின்மையிலிருந்து
வலிமைக்கும் இடையே எப்போதும்
மிச்சமிருப்பது
காலத்தின் மீச்சிறு இடைவெளி.
பிளிறல் சப்தம் கேட்கிறது
கவனம்,
எறும்பின் காலடியிலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்.
3.நகர்வு
வறண்ட நதியின் நடுவில்
சிதறிக்கிடக்கின்றன மீன்களின்
எலும்புகள்.
ஒரு ஆமை மெல்ல நகர்கிறது.
நெஞ்சு நிமிர்த்தி மரித்துக்கிடக்கும்
போர்வீரன் போல
வானம் பார்த்து கிடக்கிறது
வறண்ட நதி.
நானொரு பறவையின் கண்களாக
இருந்த காலத்தில்
இக்காட்சியைக் கண்டேன்.
இப்போது ஆமையின் காலடித் தடமாக
மாறியிருக்கிறேன்.
பறத்தலுக்கும் நகர்தலுக்கும்
நடுவே இழந்தது
ஒரு காதல்.
ஒரு விருட்சத்தின் விதை.
ஒரு சதவீத அறம்.
4. வதை
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த போது
கனவுகள் ஒவ்வொன்றாய் விரிகின்றன.
ஒரு கனவிலிருந்து மறு கனவிற்குள்
நுழைவதும்
வெளியேறுவதுமாக இருக்கிறது மனம்.
கனவுகளற்ற வெளியில்
நிர்வாணத்துடன் நின்று கையசைக்கின்றன
எண்ணற்ற உயிரிகள்.
நீல நிற பட்டாம்பூச்சியொன்று
கூரிய தன் அலகால்
உடலைக் கொத்தித் தின்கிறது.
வலியின் மிகுதியில் தப்பிக்க இயலாமல்
அங்குமிங்கும் அலைபாய்கின்றன
மனதின் கண்கள்.
ஓலங்கள் நிறைந்த கனவுலகில்
மெல்ல மலர்கிறது மலரொன்று.
அதன் இதழ்கள் அனைத்திலும்
முத்தமிட்டு சரிகின்றன உடல்கள்.
விடியலில்,
அந்த மலரின்
தன் மார்பில் வந்து விழுந்தபோது
அவனது இதழ்கள் முணுமுணுத்தன
வதைமலர்
வதைமலர்
வதைமலர்.