- பால்வெளித் துகள்கள்
அகண்ட அண்டத்திலிருந்து
குவிந்து விழும்
ஒரு நீலச்சொட்டு
பூமி
நீலக்கடலின்
தலைபிளந்து ஓடும்
பழுப்பு நிலம்
இருபத்து நான்கு மணியின்
கனம் தாளாமல்
நொடிகளாய்த் திரிந்து
விழும் நாள்
அதன் காற்கடையில் பூத்த
இரவின் அடர்த்தியில்
முயங்கிச் சுழல்கிறது பூமி.
- போதி
யசோதரை இருக்கும் துணிவில்
பொறுப்பு துறந்து
போதிமரம் தேடுகிறான் புத்தன்
அவன் விட்டுச் செல்லும்
வெற்றிடமே போதியாகிறது
யசோதரைக்கு.
- பறத்தல்
எல்லையற்ற நீலவெளியில்
நீள்கால்களை யொடுக்கி
வெண்சிறகை விரித்துச்
சல்லென்று பறக்கிறது கொக்கு,
அது பறக்கிறதென்பதைத் தவிர்த்து
சொல்வதற்கு ஒன்றுமில்லை.