cropped-logo-150x150-copy.png
0%
Editor's Choice இதழ் 1 கவிதைகள்

கவி கோ பிரியதர்ஷினி கவிதைகள்


  • தண்டனைக்குரிய  ஒரு மலர்

அளவான பனியில் நனைதல்

ஆழமான இரவின் குளிர்தல்

தீயற்ற சுகந்தம் வரைதல்

ஆன்ம நிலை காதல் உணர்தல்.

 

இவ்வாறாக உயிர்ப்பின் சகலங்களோடு

பரிகசிக்கப்பட்டிருந்த என் சிறு வாழ்வில்

எப்போதும் தண்டனைக்குரிய  நான்

ஒரு மலரின் முத்தத்திற்குத் தான்

இரையாகிக் கொண்டிருந்தேன்.

 

இரவின் வர்ணத்தைப் பழக்கிக் கொள்ளாத

இரவிலிருந்து உரிகிறது ஒரு பகல்

தன்னை தானே சுழற்றும்

அகோர பந்துகளின் நடுவே நான் பூமியிலிருந்து

தலைகவிழ இருளாகியிருந்தேன்.

 

என் நிலத்தின் மீது விரவிக்கிடக்கும்

பறைக்காகங்களின் கேச நிறத்தில்

நாங்கள் வெறும் துளியில்லை

சில்லிட்டு ஞானத்தை மோதி பிளக்கும்

என் மண்டையோடும் சகலம் திறக்கும்

பூமியும் பகல் எனும் போது

வேறாகிக் கொள்வதில்லை.

இருளை பறிக்கும் வெளிச்சத்திற்கு

எப்போதும் எதிரிகளாய் கிடக்கிறோம்

இக்கணங்கள் வரை.


  • பிதாவை மன்னிக்கும் தேவி

 

மலரே ! உன் பவித்திரமான நாளிலிருந்து

எனக்கான நாளொன்றைப் பிய்த்துக் கொள்கிறேன்.

 

என் கோடையில் ஊர் மேயும்

சத்தங்களற்ற மணியோசையைக் கழற்றி

எறிந்த குறும்பாட்டின் காணாமல் போன

தேசத்தின் மனநிலை என்னுடையது.

 

தினமொரு டூடுல்களாய் என்னை மாற்றி

மாற்றி ரெப்ரெஸ் செய்பவர்கள்

என்னை இன்னும் நரபலியிடாமல்

ஆச்சரியப்பட வைக்கிறார்கள்.

 

எலக்ட்ரிக் சுடுகாடுகளில் எந்த புறமும்

எக்கணமும் சாம்பலாகக் கூடும் தருவாயில்

மரணத்தின் வாய் பிளக்கப்பட்டு

ஊரார் நீலிக் கண்ணீர் சூழ,

என் ஆறடிகளை 

ஒரு சாண் வயிறு

அளவிட்டுக் கொண்டிருக்கும்.

 

தேவிகளே!

கொன்று வீசப்படும் என் உடல்களில்

கை வேறு கால் வேறு

என்றாலும்,

சொட்டு விடாமல் குடித்தே

இரத்தம் குறிப்பிடாமல் போவதைப் பற்றி

நீ கவலை கொள்ளவில்லையே!

 

உன் பெயரைச் சொல்லி

என்னை மசாலாவில் நுழைத்தார்கள்.

தீமுட்டி அவித்தார்கள்

நான் கொழுப்புருக நிரம்பி வழிகிறேன்.

 

தேவி ஆறாய் ஓடும்

அந்த இலையில் என்னை

உண்ணாமல் ஏன் தாமதிக்கிறாய்

உன் பெயரைச் சொல்லி என்னை

உண்பவர்களை நான்

பிதாவாக மன்னித்தேன்.

 

நீ தேவியாகவே நின்று அருளிவிடு

நான் அரிவாளிலிருந்து கசிந்து

இலையில் ஓடிக் கொண்டிருக்கும் வரை

எனக்கு அருளியது போன்று.


About the author

பிரியதர்ஷினி

பிரியதர்ஷினி

திருச்சியை சார்ந்த பிரியதர்ஷினி இளங்கலை விலங்கியல், முதுகலை விலங்கியல், இளங்கலை கல்வியியல் பயின்றுள்ளார். பள்ளிக்கல்வித் துறையின் கவிதை போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். பள்ளி ஆசிரியர் மற்றும் துப்புரவுப் பணியாளர் குழந்தைகளுக்கான சமூகப்பணி தொண்டு நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார்.
படைப்பு, அணங்கு, நீலம், காற்றுவெளி, இந்து தமிழ் திசை, குவிகம், நடு இதழ், நுட்பம், கலகம், கொலுசு ஆகிய இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்திருக்கிறது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “ தோடயம்” யாவரும் பதிப்பகம் மூலம் 2024 ஆம் ஆண்டு கோவை புத்தகக் காட்சியின் போது வெளியானது.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
ரா.பாபுராஜ்.

அருமையான பதிவு.. வாழ்த்துகள் அக்கா

You cannot copy content of this Website