- முட்டாளே மறந்தால்தானென்ன?
ஏழாம் நாளாய் பசியில்
எலும்பும் தோலுமாய் சுருண்டு கிடக்கும்
யாசகனின் முட்டாள் வயிறு
பசிக்க மறந்தால்தான் என்ன?
கத்திரி வெயில் கொளுத்தியெடுக்க
குடிநீரோ மைல் தொலைவிலிருக்கச்
சென்று கொண்டுவரும் அந்தக்
கொஞ்ச நேரமாவது இந்த முட்டாள்
சூரியன் உரைக்க மறந்தால் தானென்ன?
கூன்பாட்டிதான் கூட்ட மலைக்கிறாளே,
தினந்தினம் வாசலில்
இந்த முட்டாள் கொன்றை மரம்
பூக்களை உதிர்க்க மறந்தால் தானென்ன?
நல்லதோ கெட்டதோ
பார்ப்பவனின் உள்ளம் தாண்டித்
தான் உணர்ந்த கருத்தை
இந்த முட்டாள் கவிஞன்
எழுத மறந்தால் தானென்ன?
ஏழைத் தகப்பனுக்குப் பிள்ளையாய்ப் பிறந்து
அவனுக்கு இயலாத காரியங்களைக்
கச்சிதமாய் கண்டறிந்த
இந்த முட்டாள் குழந்தை
அழுது அடம் பண்ண மறந்தால் தானென்ன?
பிள்ளைகளிரண்டும் மூலையில் பதுங்கியிருக்க
ஓட்டுக் கூரை ஒழுகிக் கொண்டிருக்கப்
பாட்டம் பாட்டமாய்ப் பெய்யுமிந்த முட்டாள் மழை
இந்த ஓரிரவு மட்டும் பெய்ய மறந்தால் தானென்ன?
பிறந்து பிறந்து பசியில் இறக்கும்
ஏழைக் குழந்தைகளுக்குப்
படியளக்கத் துப்பில்லாவிட்டால்
முட்டாள் கடவுளே
அவர்களைப் படைக்க மறந்தால் தானென்ன?
- வேண்டும்…
காலாற நடக்க வேண்டும்…
பாதையும் உன்னோடான பயணமும்
முடிவில்லாமல் நீண்டிட வேண்டும்…
கைபிடித்து நடந்திட வேண்டும்…
என் உள்ளங்கை ரேகை உரசி,
உன் உள்ளங்கை ஓவியம் அழியாதிருக்க வேண்டும்…
வழக்காடிக் களைத்திட வேண்டும்…
உன் கோபமும் என் பொறுமையும்
களைத்திடாது மோதிக் கொள்ளும்
ஒவ்வோர் புள்ளியும் காற்புள்ளியாகிட வேண்டும்…
சிரித்துப் பேசிட வேண்டும்…
உன் ஒட்டுமொத்த சிரிப்பின்
படைப்பாளனும் பார்வையாளனுமாய்
நானேயிருந்திட வேண்டும்…
மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும்…
நாட்காட்டியின் ஒவ்வோர் நாட்கிழிப்பும்
ஓர் பண்டிகை தினமாகி,
நம் மகிழ்வு தினந்தினமாகிட வேண்டும்…
- எப்படித் திருடுவேன்?
ஒளிந்தயிடமெல்லாம் இப்படி ஒளிர்ந்து தொலைத்தால்
நான் எப்படித் திருடுவேன்?
ஊரடங்கியும் ராவலம் வரும் உனை ஏமாற்றி
நான் எப்படித் திருடுவேன்?
எண்ணிடாமல் வந்தபின்னர் கன்னிக்காவலுனை மீறி
நான் எப்படித் திருடுவேன்?
வானகலக் கூந்தல் பரப்பி எதிரொளித்திடும் திருமுகத்தினால்
திருடத் தோற்றுத் திரும்புகிறேன்…
உனக்கு விடுமுறையென்பது உண்மையா சொல்,
வரும் அமாவாசையன்றே நான் திருடிக் கொள்கிறேன்…
- கலர் நிலவு
மழைக்காலத்தின் மஞ்சளும் சிவப்பும்
சரிபாதியாய் சீரற்று கலந்து
கிரீடம் அணிந்த அந்த நிலவுக்கு
என்மேல் கொள்ளைப் பிரியம்
என்னைப் பார்த்து வீட்டின் மூன்றாம் தளத்திலிருந்த
பதினான்கடி நீளச் சன்னலுக்குள் நுழைய முயன்று தோற்கையில்
அதற்குதவ நான் விழித்துக் கொள்ளவா முடியும்?
கண்விழித்ததும் மூன்றுநாள் பசிக்கு
உணவு கிடைத்தால் பரவாயில்லை,
பிய்ந்து போன எனதருமைப் பொம்மையைச் செருகி
ஓட்டின் ஒழுகலை அடைத்ததையல்லவா பார்க்க நேரிடும்!
கனவானாலும் கலர் நிலவு அழகாய்த்தானுள்ளது…
- வலி
தீர்க்கமாகத்தான் சொல்கிறேன்…
ராணுவத்தில் கணவனைத் தொலைத்த மனைவியை விட,
தற்கொலையில் மகளையிழந்த தாயை விட,
பசியால் வீரிட்டு அழும் குழந்தையை
வழியின்றி அதட்டி அமைதிப்படுத்தும் தந்தையின் நிலையை விட,
வெளிநாட்டிலிருந்து கொண்டு ஆசைத் தங்கையின் திருமணத்தைக்
காணொளியில் காண்பதை விட,
காதல் தோல்வியின் வலி ஒன்றும்
அத்தனை கொடூரமானதல்ல…