உதிரிறகொன்றை
உள்ளங்கையில் ஏந்துகையில்
கோழிக்குஞ்சொன்றின் கீச்சலில்
வாழ்வொன்று புதுப்பிக்கப்படுகிறது.
அது காற்றிடை அலைந்து
வானையும் பூமியையும் ஒருசேர அளக்கிறது
உள்ளங்கையிலிருந்தபடியே…
தமதுள்ளம் துப்பிய சொற்களே
தற்போதெம்மை வந்தடைகின்றன
எனும் உறுத்தலை மறந்தோர்க்கு
ஆற்றுவது இல்..
குறு விழிகளில் கசிந்து பெருகும்
குழந்தையின் அன்பிற்குக்
கொட்டிக் களிக்கிறது பெருமழை
பெருகிக் கிளைத்தோடும் ஆறு
அது நீள் கவிதைதான்
ஆழம் தொனிதான்
நுரைத்தல் உரைத்தல்தான்
அமைதி பேசாப்பொருள்தான்
நிற்காமலோடுவது சுவைதான்
ஆறு அடங்காது கரைக்குள்
அடங்கிய கரையோ கர்வமானது
அன்பிற்குள் அடக்கிவைத்த ஆற்றை
அது புணர்ந்து களைத்துக் கிடக்கிறது
அதன் புணர் நரம்புகளில் இன்பத்தின்
சுவையை ஆறு எழுதியோடுகிறது..
அகிலத்தின் அத்தனை ரகசியங்களையும்
ஆறுதான் உலகின் உயிர்களுக்குப்
பரவசமூட்டிச் சொல்கிறது
கேட்டுக் கேட்டுச் சலிக்காமல்
ஆற்றுடன் உறவாடிக் களிக்கிறார்கள்..
எதற்கும் அடங்காத ஆறு
எல்லாவற்றையும் அடக்கி யோடுகிறது..
ஆறு என்பதற்கு அன்பு என்றும்
இணைபொருள் ஒன்றைத் தந்துவிட்டால்
ஆறு குறித்து யாரும் கதைக்கலாம் கவிதையியற்றலாம்
ஆறு ஒன்றும் சொல்லாமல்
கவிதைக்குள் ஓடிக் களிக்கும்.