- இரு நாய்களின் சங்கமம்
வாங்கி வளைத்துப் போட்ட
வேலிக்குள் ஒன்றும்
வெளியே பங்கு போகாப்
பரந்த நிலத்தில் ஒன்றும்
பின் தட்டைத் தேய்த்துக் கொண்டு,
வானை அண்ணாந்து பார்ப்பதுவும்
பின் ஒன்றை ஒன்று பார்ப்பதுவுமாகப்
பேசிக்கொள்கிறது
அவ்வப்போது அதன்
பின்னங்கால் உயர்த்தி
காதைச் சொறியாமலும் இல்லை
முன்னங்கை பலமற்ற ஜீவன் போலது.
நாய்,
நாய்ப் பாஷையால்
ஏதேதோ பேசுகிறது
அது எந்த வீட்டுத் தேய்காய்ப்பாதியைத்
திருடியகதையோ !
யார் கடன் பட்டு வாங்கி வைத்த
நாய்ப் பனையனைக் கவ்விய
மகிழ்ச்சி பொதிந்த கதையோ !
யாருடைய இரகசியத்தைத் தெருவில்
இழுத்து விட்டு இயற்கைக்குச்
சிரிப்பூட்டுகிறதோ !
உள்ளர்த்தங்கள் தேடிய
ஆராய்ச்சி மிகு கதையோ !
இல்லை ஊரை உலையில் இட
என்னென்ன தந்திரங்கள் செய்கிறதோ !
நாய் , அவ்வப்போது அதன் வாலை
நிமிர்த்திச் சுருட்டாமலுமில்லை
தெருவோர வெட்டையில்
வேலிக்குள்ளும், வெளியும் இருந்த
நாய்களுக்குப் பல வண்டிகள்
தன் வாயுவைப் பின்புறமாகத்
தள்ளிவிட்டுச் செல்கையிலும்
மூக்குச் செத்த நாய்களதை முகரவும்
முயற்சி செய்கிறது
நாய், நாய் பாஷையில்
ஏதேதோ பேச
அது புரியாத நான்
என்னைத்தான் குதறுவது பற்றிய
திட்டம் தீட்டுகிறதோ என்று
தள்ளி நடக்கிறேன்
நாய் அதன் வாலை நிமிர்த்த முயற்சித்தபடி
சுருட்டிக் கொண்டு ஒன்றுக்கொன்று
வானை வளைக்க முயன்ற படி
கழுத்தை நீட்டி நீட்டிப் பேசுகிறது
நாய் பாஷையில்!
- கட்டில் கிடந்தவன்
நித்திரைத் தொட்டியில்
நிரம்பிக் கிடந்தேன்
செவிப்புலனை அதிரச்
செய்த படி விழித்திரையைக்
கொத்திக் கிழிக்கிறது
காகங்கள்….
அந்த வழி வந்த
காற்றுக் குழந்தைக்கு
என் வீதிக் கதவில் ஊஞ்சலாடுவது
என்றால் மிகவும் பிடிக்கும்!
எப்போதும் அதே
காற்றுக் குழந்தை தான்
வருகிறதா இல்லை
வேறுவேறு
காற்றுக் குழந்தைகள் வந்து
என் வீதிக் கதவில் ஊஞ்சலாடுகிறதோ
தெரியவில்லை…
என்னைச் சிலிர்க்கச்
செய்யும் சேட்டை புரிவதால்
சாளரங்களையும் அடைத்து விடுகிறேன்
அவர்கள்
என்னறைக்குள் நுழையாதபடி!
இப்போது
என் நித்திரைத் தொட்டியைக்
குலுக்கி
என்னை எழுப்பி விட எத்தனிக்கும்
காற்றுக் குழந்தைகள்
வேலிக் கதவினையே
ஊன்றி உலுப்புகிறது
நான் ஒரு பூனைக் குட்டிபோல்
படுக்கையில்
குழைகிறேன்…
தீடிரென தெருக் கதவிற்கோ
அதில் ஏறி விளையாடிய
காற்றுக் குழந்தைக்கோ
வாய் முளைத்து
குரல் கேல்லியது
இனியும் என் நித்திரை
தொட்டி கலங்காமலிருக்குமா!
அத்தனை சோம்பலோடும்
விடுக்காத கண்ணோடும்
பல மணி நேரங்கள்
ஒட்டியிருந்த உதட்டின் பிசுபிசுப்போடும்….
கொள்ளிவாய் பேய் போல்
எழுந்து சென்று தெருத் திரையை
அவிழ்க்கிறேன்
அங்கினை ஒருத்தன்
அரண்டு அரண்டு
மிரள்கிறான் ஓ….
இவனுக்கு ஜல்லிக்கட்டு
காளையென நினைப்போ
என்று மனதிற்குள் நினைத்தது
காற்றுக்குத் தெரிந்திருக்கக்கூடும்
கன்னத்தில் அறைகிறது என்னை!
யாரென்று வினவ முன்னமே
யாரையோ விசாரிப்பது
போல் வந்தவன்…
பெண்ணொன்று
வேண்டும் மா(ப்)பிள்ளை
வலித்துக் கிடக்கிறான்
என்றான் …
கட்டில் கிடந்து இப்போது தான் அவிழ்க்கப் பட்டிருக்க
வேண்டும் இந்தச் சைத்தான்
இன்று புனித ரமலான்
விடை பெறும் நாளல்லவா!
முகவரி தவறிய
வருகை என்றேன்
முற்றம் முழுவதும்
சிதறிக்கிடந்தது அவன் பற்கள்!
இனியென்ன
ஓரிரவின் பொழுதெல்லாம்
சேமித்து வைத்திருந்த
உதட்டுப் பிசினை உதிர்த்து
உதறினேன் அந்தோ பறக்கிறான்
அடி பட்ட கழுகாகக்
காற்று தலை தடவி மெல்ல
ஆறுதல் சொன்னது
இப்போது காற்று என் அறையில்
அம்மணக் கூத்தில்
உள் நுழைய அனுமதி கிடைத்ததென்று!
Art Courtesy : leftbankgallery.com
மிகவும் மகிழ்ச்சி நன்றி நுட்பம்