- எங்கும் எதிலும் நீலம் நீலம்.
மஞ்சள் வண்ணப்பெயிண்ட்
சிறு டப்பி இருந்தது.
அவள்
நீல நிறம் கொண்டு வந்தாள்.
வெள்ளை நிற மல்லிச்சரமும்
சிவப்பு ரோஜாவும்
அச்சமயத்துக் கூந்தலுக்கு எடுப்பூட்டியது.
மஞ்சளையும்
நீலத்தையும்
கொட்டிக்கலந்து அதனுள் எம்பிக்குதித்தோம்.
வானில் நீலவண்ணக்குதிரைகள்.
- பழமை.
பற்களைக் கழற்றி
எதிராளியை நோக்கி விட்டெறியும்
வினோதப்பழக்கம்
புழக்கத்திற்கு வந்த ஒரு கதையை
முதியவர் ஒருவர்
சில பிள்ளைகளை முன் அமர்த்தி
நம்பகத்தன்மை மிகுந்த முக பாவனையோடு
விவரித்தார்.
நாக்கைக் கழற்றி
எதிராளியை நோக்கி விட்டெறியும் பழக்கம்
தீவிரமாய் பரவத்தொடங்கியிருக்கிறது ஐயா
என்றான் வழிப்போக்கன்.
அது இரண்டாயிரம் வருடங்கள்
பழமை வாய்ந்தது
நான் கூறும் பற்களுக்கு
வயது ஒரு நாள்.
- வெளிச்சம்.
ஊரிலிருந்து வாங்கி வந்தேன்
ஒரு வில்லை வெளிச்சம்
என்றதும்
அறை நண்பர்களில் ஒருவன் சிரித்தான்
மற்றொருவன் கண்களைப் பார்த்தான்
கண் பார்த்த அவனும் நானும்
அன்று மாலை
முதல் முறையாய் இணைந்து
மது அருந்தினோம்
அதன் கசப்பிற்கு கடித்து மெல்ல
வெளிச்சத்தின் வில்லை
துணை செய்தது.
Painting Courtesy : etsy.com