cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 5 கவிதைகள்

கனகா பாலன் கவிதைகள்


த்து கூறாக்குன
பரம்பரைச் சொத்துல
படிக்காத கடைக்குட்டிக்கு
கால் குறுக்கம் நிலம்
கழுதை வாலாட்டம்

சாகப்போற நேரத்துல
ஆத்தா வாங்குன சத்தியம்
தாய் மாமன் புத்திரி
தர்மபத்தினியானது
கடுத்துக் கிடக்கும்
தலையெழுத்து விதி

வருஷம் அஞ்சுக்குள்ள
தொழுவத்துல நாலும்
விட்டுக்குள்ள மூனுமா
ஏழு குட்டிக
ஆடுகளும் குழந்தைகளும் ம்மா’ னு தானே கூப்புடுதுக

பனங்கருப்பு நெறத்துக்காரனுக்கு
பல்லு மட்டும் பச்சரிசி வரிசை
நுணுக்கி ஒதுக்குன மீசையோரம்
கதிர் அறுவாத் தழும்பு

தெத்துப் பல்லு அழகம்மைக்கு
தேவதையாட்டம் கண்ணு
கூடவே இருக்கும்
வண்டி வண்டியாய்
வாய்க்கொழுப்பு.

பேருக்குத் தாலி கட்டி
பெறப்புக்கு பிள்ளை பெத்து
கடைமைக்கேனு காலந்தள்ளும்
அப்புராணி ஆயிரம் உண்டு
அங்கயிங்க அவுகளைப் போல ..

கையிலிருந்த
சமோசாவின்
எஞ்சியிருக்கும்
எண்ணெய்யினை
ஒத்தி யெடுத்த
காகிதத்தில்
அச்சடிக்கப்பட்டிருந்தது
தெரிந்த கவிஞரின்
புகழ்மிக்க வரிகள்

கசக்கிச் சுருட்டி
இருக்கையின் அடியில்
உருட்டி விட்டவர்
கடைசி வரை தெரிந்திருக்கவில்லை
அந்தக் கவிதையின் வாசனையை

சிறிது நேரத்தில்
மொய்த்த எறும்புகள்
கூடிக் கூடிப் பேசுவது
என்னவாக இருக்கும்?

பேசிக்கொண்டிருந்த
அனைவரையும் ஒதுக்கிப்
பேசப் போனோம் இருவரும்

ஒரேயளவாக
எட்டெடுத்து வைக்க
கவனம் முழுவதையும்
பாதங்களுக்குப் பாய்ச்சினாய் ரகசியமாக

அவ்வப்போது
தொட்டு உரசி நகர்ந்து கொள்ளும்
அவரவர் சுண்டுவிரல்களில்
பிடித்த நடுக்கம்

காற்றின் குறும்பில்
கலந்து கொண்ட
நம் வாசனைகளை
நுகரத் தவறவில்லை
நீயுங்கூட.

எதிரெதிராக ஊடுருவிய
விழிகள்
நிலைமைக்குத் திரும்ப
இன்னுங் கொஞ்சம் நேரமாகலாம்.

உள்திருப்பிய மொழிகளோடு
அதிசயமாய்
ஆயிரம் பேசிவிட்டோம்
திரும்பலாம் வா..!

ன்
இந்த மனிதர்கள் இத்தனை அவசரமாக இருக்கிறார்கள்

தலைச் சுற்றும் வேகத்திற்கு
விரைந்து செல்லும் வாகனத்தில்
அமர்ந்த சிலையாகக் காட்சி
இங்கிருந்து பார்க்கையில்

பின் வருபவரிலிருந்து
முந்திக் கொள்ள
வளைந்து நெளிந்து
வரிசைகளைக் குலைத்துப்போடும்
அநாகரீகம்
எரிச்சலைக் கிளர்த்தும் கோபத் தீ

சிறு மகனைக்
கால்நடையில்
அழைத்துச் செல்லும்
அம்மாக்களின் காலம்
ஸ்கூட்டியில் விரைவது
அழகும் பெருமையுமானது

கொளுத்தும் வெயிலுக்கு
மோர் அருந்தச் சென்றிருக்கலாம்
சாலை ஒழுங்கமைப்பாளர்

நோய்வாய்ப்புற்ற
சிக்னல் விளக்கினை
எப்போது குணமாக்குவார்களோ
யாருக்குத் தெரியும்

படுத்துக் கிடக்கும்
ஜீப்ரா கோடுகளின்
கால் மாட்டில்
தயங்கி நிற்கிறேன்
பத்து நிமிடங்களாக
அக்கரை செல்லவேண்டும்.


  • கனகா பாலன்

About the author

கனகா பாலன்

கனகா பாலன்

தென்காசி மாவட்டம் வெள்ளாகுளம் கிராமத்தில் பிறந்த கனகா பாலன், தற்போது சென்னையில் வசிக்கிறார்.

“என் கனா யாழ் நீ”, “அகயாழின் குரல்” மற்றும் “உன் கிளையில் என் கூடு” எனும் மூன்று கவிதை நூல்களும் “பாறைக்குளத்து மீன்கள்” என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார்.

அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரின் படைப்புகள் வெளியாகி இருக்கின்றன

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website