1. சூழல் வீரன்
கனி சுவைத்துத் திரும்பும்
அந்நாளின் கடைசியில்
’என்ன ஒன்றுமே சொல்லாம போற..’
துரத்தி வந்து கேட்பாள்
ஏழ்மையைக் கருத்தில் கொண்டு
ஓராண்டிற்கான புன்னகையை
மொத்தமாக வாங்கிப் போகிறவனுக்கு
’விலையைப் நீயே பார்த்துச் சொல்’
என்றவன் புருவக் கேலிக்குச்
’சத்தியமா நீ மூன்றாம் சாதிடா’
என்று காதைக் கடிப்பாள்
அச்சாணக்கியன் பதிவதுமின்றி
மீண்டும் நிலத்தில் இறங்கி
களவீரன் வேகத்தில் வியர்வையோடு உழுவான்
அவன் ஒருவனல்ல பன்மையின் பலன்.
2. மீச்சிறு பயணம்
நத்தையொன்று மெல்ல ஊர்ந்து செல்ல
வெயில் சுருட்டுகிறதா என அருவி கரிசனம் கொட்டும்
தன் ஊசிநிகர் கூர் உணர்வின் கொம்பை உயர்த்தியது
அப்படியொன்றுமில்லை என வளைந்து போகப்
பக்கவாட்டு மூங்கில் மரத்து அணிலோ
அத்துணை நேரம் உற்றுப் பார்த்தது
சட்டென வாலாட்டிப் பரிகசித்து
யாரோவெனக் குதித்தோடும்
தாகம் தீர மேகம் நோக்கிக் கரையும்
பாவப்பட்ட காகத்தை நனைக்கலாமென
ஏறிட்டுப் பார்க்கையில் எங்கிருந்தோ வரும்
இக்காமத்தில் நீரருந்திக் கொள்வோனெனச்
சொல்லாமல் சொல்லிப் பறக்கும்
ஒரு காலிக்குடுவையைத் தேடியலையும்
தளும்பும் அருவி நுட்ப கீற்றுகள்
விளைவிக்க இயலாததிர்வில் நாளும்
வேகம் கூடித் தொங்கும் என்றாலும்
பாயும் அருவியால் ஒருபோதும்
பாத்திரம் நிறைக்கவியலாது
தள்ளி விடுமென்பதே பச்சை சூழியல் நிஜம்.
3. துகள் பிடி விளையாடல்
அது ஒரு மணற்பைத்தியம்
மணல் எழுத்து என்றால் கூடுதல் பைத்தியம்
அழித்து அழித்து புதிதாய்க் கிறுக்கலாமே எனும் கிறுக்கு
ஆசை வீடு கட்டலாம் என்று ஆர்வம் தூண்டியது
சரிந்து விடும் உறுதியற்ற
வெறும் பொதி கலந்ததுபோல்
கலந்து பிரிந்தே கிடக்கலாம்
எனும் தந்திரத்துகள்
கையில் பிடித்து விளையாட இரக்கமின்றி
கண்ணில் நுழைந்து குருடாக்கும்
குறுங்கொடுமை சூழல் மறக்கச் செய்யும்
சுழலில் சிக்கச் செய்யும்
ஈரமில்லாது போனால் தான்
எங்கும் பறக்க முடியுமென முழக்கமிடும்
ஆனால் பாருங்கள்
ஈரப்பெருங்கடல் வெளியில்தான்
எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும்
மண் இல்லாமையின் வறட்சி
ஈர்த்திருக்க மயங்கி விட்டால்
கால்களில் ஏறும் கரிப்பின் சுவை
அரித்தே கொல்லும் எச்சரிக்கை
மணற்குழிகளல்ல மணலே சவக்குழி.
அன்பின் நன்றிகள் ☔️