cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 5 கவிதைகள்

நானும், ஒரு திரும்புதலும்


1.

காலை 9.00 மணி
சிறு ஒளியில்
அந்த இடத்தில் நிற்கின்றேன்
ஓரிரண்டு சக உருவங்கள்
மட்டுமே தெரிந்ததில்
மிக நட்போடு சிரித்தேன்
உள் சென்றமர்ந்தேன்
சில நிமிடங்களில்
என் தலை பின்னே திரும்பியது
என்னைக் கேட்காமல்
வேறு யார் யாரோ
நின்றார்கள்
தாராளவாதக் கொள்கைகளை
நடைமுறைப்படுத்துவதில் குழப்பமுறும் மக்களாட்சி போல
உடல் குழம்பி வேர்த்தது
அது மட்டுமல்ல
உடல் ஒரு விநோத பிரச்சினையையும்
எதிர் கொண்டது
பிம்பம் ஒன்றை விரும்பிப் பார்க்க
நியூரான்கள் கட்டளை
இட்டுக்கொண்டேயிருந்ததில்
என் மூளை கொதிநிலை கண்டது
அந்த இடம் பலப்பல
வடிவ உருவங்களால்
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது
இப்போது
நான் வெற்றிட இருக்கைகளைத் திரும்பி பார்க்கத் தொடங்கினேன்
ஏதோ
ஒரு நிலப்பிரதேசத்தில்
சிக்கிக்கொண்ட உணர்வு
அங்கு ஏதேதோ
ஊளைக்குரல்கள் ஒலித்தன
நான் மறுபடியும் திரும்புகிறேன்
இன்று ஏன் திரும்பிப் பார்த்தலை
என் உடல் விரும்புகின்றது?
நான் ஏன் பதட்டத்தின்
விளிம்பில் நிற்கின்றேன்?
என் நரம்பு மண்டலம்
ஒரு சமிக்ஞை காட்ட
தவிப்பது புரிந்து
கொஞ்ச நேரம் திரும்பாமல் இருந்தேன்
எனக்கு இப்போது
வண்ணங்களை அதிகம் காணத் தோன்றியது
என் திரும்புதல் பொய்த்துவிடுமோ
என்ற பேரச்சத்தில்
என் உடல்
வண்ணக் கலவையைப் பூசக் கட்டளையிட்டது
யாரோ
என்னைப் பிடித்திழுக்கிறார்கள்
பல அடர்த்தியான
வண்ணங்கள்
நூற்றாண்டுக் கடந்த நிறக்குடுவைகள்
திறந்துக் கொட்ட ஆரம்பித்ததில்
குருதியின் நிறமும் நிறைந்தது
அது மிக மூர்க்கமாக இருந்தது
தவிர,
பேசவும் செய்தது
உனக்கும், திரும்புதலுக்கும் இப்போது
கொஞ்சம் இடைவெளி தேவையென்றதில்,
நான்
கழுத்தை கீழ் வைத்து
திரும்புதல் தேவையன்றி
அசைவற்றுக் கிடக்கிறேன்.

நீ
என் நெஞ்செலும்புக் கூடுகளில்
கால் வைத்து தடுமாறி
அந்த இடத்தில்
உள் நுழைகிறாய்.

2.

இப்பொழுது
உடல் சற்று அசைகிறது
நினைவுகளை மறு ஆக்கம் செய்து
புலனுணர்வினைத் தட்டியதில்,
அது பொருள் முதல் வாதம்
கருத்து முதல் வாதம்
என தத்துவம் பேசியது

என் பார்வைகள் பொருந்தாத கோடுகளை
மாயையாகத் திரையில் காட்டுகின்றன

ஒரு அலாதி ப்ரியம் என்பது
அதனில் வெட்டுப்பட்டுக்கிடந்தது

நான் என்ன செய்ய முடியும்?

மற்றவர் அறியா நிலையில்
அதை மறைத்து தினமும்
துணங்கைக் கூத்து தான் ஆடமுடியும்.

அன்றே
எம் அம்மை
முது காட்டின் ரகசியம்
உணர்த்தியுள்ளாள்

இப்பொழுது
இந்தச் சதைகளை
சிறு சிறு துணுக்குகளாய் மாற்ற
சமரசம் செய்துக்கொள்ள வேண்டும்.

இறுதியாக,
உடல் என்பது
ஒரு அட்டூழியம் மட்டுமே
வேறெதுமில்லை.


ஒலி வடிவில் கேட்க:

நானும், ஒரு திரும்புதலும்

குரல் : ம.கண்ணம்மாள்.

About the author

ம.கண்ணம்மாள்

ம.கண்ணம்மாள்

மருத நிலம் தஞ்சையை சொந்தமாகக் கொண்டவர். பொதுவெளியில் கவிதை, சிறுகதை என இயங்கி வருகிறார்.
"சன்னத்தூறல் " இவரின் முதல் கவிதைத்தொகுப்பு.
அடுத்த கவிதைத்தொகுப்பு “அதகளத்தி” சமீபத்தில் வெளியானது.

Subscribe
Notify of
guest
4 Comments
Inline Feedbacks
View all comments
திலகன்

உடல் என்பது அட்டுழியம் என்பதே! சமீபகாலத்தில் வாசித்த சிறந்த கவிதை.

மனோகரி

கவிதைக்குள் சொல்லப்பட்ட உணர்வுகள் புரிகிறது. கோட்பாட்டு சிலேடைகள் கவிஞர்களுக்கு உரியது. :) அருமை கண்ணம்மாள் அவர்களே!

லதா அம்பலவாணன்

உணர்வுகள் மிக நுட்பமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உடல் என்பது ஒரு அட்டூழியம் என்பதை மிக அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. சொல்லாடல் மிக அருமை மேடம்! மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Dr. G. Raja

உடல் மொழி, அது குறித்த புரிதல் சிறப்பு. என் சிற்றறிவிற்கு கவிதையில் உள்ள படிமத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.

You cannot copy content of this Website