cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 6 கவிதைகள்

பூவிதழ் உமேஷ் கவிதைகள்


கழுவிய உருளைக்கிழங்கு போன்ற முகம்

எல்லாம் தொடங்கும் நகரத்திலிருந்து
எல்லாம் முடிவடையும் நகரத்திற்கு வந்திருக்கிறேன்.
கழுவிய உருளைக்கிழங்கு போன்ற முகம் உடைய ஒருத்தி
அவள் எங்கு ஒளிந்திருக்கிறாள் என்று அவளே தேடும் இவ்வூரில்
ஒரு நீர்க்குமிழியைப் பிடித்து
கூடுதல் இதயமாகத் தைத்துக்கொண்டேன்.
எங்கிருந்து வந்திருக்கிறாய் என்ற வினாவிற்கு
அட்ச தீர்க்க ரேகைகளில் பதிலளித்தவன் மேல்
சற்றுமுன் இரக்கம் காட்டிவிட்டதால்
அடுத்துவருபவர் மேல் காட்ட மீதி இரக்கம் இல்லை.
கண்ணுக்குத் தெரியாத தெருக்களும் உள்ள இவ்வூரில்
சுற்றி அலைவதற்கு ஏற்ற கால்கள் உள்ள அவளிடம் காட்ட
என்னிடம் இரக்கம் கொஞ்சமும் இல்லை.
துளைகள் உள்ள படகு
தானே தண்ணீராய் நிரம்புவது போல
நகரெங்கும் அவள் அழகே நிரம்பியது.
பிறந்ததிலிருந்தே வியப்படைவதை நிறுத்தாத அவளிடம்
போதையிலிருப்பவன் வார்த்தையைத் தட்டுவதுபோல பேசினேன்
எளிய மிருகத்தை வெளியேற்றுவது போல
முறைப்பையும் சிணுங்கலையும் வெளியேற்றினாள்.
எடையற்ற ஒரு முரண்பாடு மிக லேசாகத் தொடங்கியது
மலையைக் கவிழ்க்க முடியும் என்று அவள் சொன்னாலும்
ஏற்றுக்கொள்வேன் இனி.
மலையின் குளிர்கால புல்லிடம் பேசுவது போல .
காதைப் பற்றிய கவலையின்றி
வாய்க்கு வசதியான சில சொற்களைப் பேசினாள்
செவ்வடிவம் அல்லாத காதிதத்தில் கடிதம் எழுதி
மடிக்கத் திணறுவது போல யோசித்தாள்.
சூரியன் செடிநேரத்தில் உச்சிக்கு வந்ததும்
தன் நிழலைப் பார்த்து பரவசத்தோடு சிரித்தாள்
அவள் அவளுக்கு கிடைத்து விட்டிருக்கக்கூடும்
எல்லாம் முடியும் நகரத்திலிருந்து
எல்லாம் தொடங்கும் நகரத்திற்குத் திரும்புகிறேன்.
இனி எங்கு ஒளிந்திருக்கிறேன் என்று என்னையே தேடுவேன்.


அடிக்குறிப்புகளில் மட்டும் காதலை எழுதுதல்

அன்பே! இருபுறமும் மரங்கள் பூத்த
சாலையைப் போல
உன் பெயர் அழகாக உள்ளது
மைல்கற்களுக்கு பதிலாய்
என் தவறுகளை நட்டு வைத்திருக்கிறாய்
( இனி உனக்கான குறிப்பு:
நீ மன்னிக்கக் கூடிய அழகான தவறுகளைச் செய்ய விரும்புகிறேன்)
பூமியைத் திருமணம் செய்துகொள்ள விரும்புபவனுக்கான
முதல் பிரச்சனை போல சிரிக்கிறாய்.
எதிர்பாராததை
கொஞ்சம் கொஞ்சமாக நிறைய சொல்
எரிந்த மெழுகுவர்த்தியின் எச்சங்களில்
தீ செதுக்கிய சிற்பங்கள் போல அவை நிற்கட்டும்
(இனி உனக்கான குறிப்பு: மற்ற நேரங்களில் உன் சிரிப்பு கொள்ளை அழகு)
மற்றபடி
வெயிலுக்கு நிற்கிற ஆடுகள் போல
உன் உணவு தட்டில் சோற்றுப் பருக்கைகள் இருக்கின்றன
ஒருவகையில் மிதக்க செய்வதால் தூங்குவதும் நீச்சல் போன்றது தான்
பசியை தள்ளிப்போட தூங்கிவிடுகிறேன்
(இனி உனக்கான குறிப்பு:
பெண் இதயம் சாப்பிட விரும்பும் விலங்கு நான்.)


Art Courtesy : mennyfox55.tumblr.com

About the author

பூவிதழ் உமேஷ்

பூவிதழ் உமேஷ்

பூவிதழ் உமேஷ் தர்மபுரி மாவட்டத்தை சார்ந்தவர். ‘வெயில் ஒளிந்து கொள்ளும் அழகி’ என்ற கவிதை தொகுப்பு மூலம் பரவலாக அறியப்பட்டவர். ‘சதுரமான மூக்கு’ மற்றும் துரிஞ்சி’ ஆகிய கவிதை நூல்களுக்கு தமிழின் முதல் அஃபோரிச கவிதை நூலான ‘தண்ணீரின் சிரிப்பு’ எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். எழுத்தெனப்படுவது எனும் இலக்கணம் சார்ந்த நூலையும் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

சிறுவர் இலக்கியத்திலும் பங்களித்து வரும் இவர் குழந்தைகளுக்காக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

செளமா இலக்கிய விருது, திருப்பூர் இலக்கிய விருது, தமிழ்நாடு கலை இலக்கிய மேடை விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். , சமீபத்தில் இவரின் “சதுரமான மூக்கு” சிறந்த கவிதைத் தொகுப்பு -2023க்கான படைப்பு இலக்கிய விருது பெற்றுள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website