நூறு கஞ்சா செடிகளுக்கு
மத்தியில் எனை புதையுங்கள்
நான் அதன் ஆழத்தில் கலக்கிறேன்..
புதிதாய் முளைத்த வேர்களை பிடித்து
ஞானத்தோடு பிணைகிறேன்..
உங்களுக்கு எவ்வித இடையூறுமில்லாமல்
நான் புகைப்படுவேன்.
நான் புதையுண்ட இடத்தில் முளைக்கும்
ஒவ்வொரு கஞ்சா இலைகளிலும்
என் பித்து ஊறியிருக்கும்.
நீங்கள் மெதுவாக அதனை கசக்கி
உங்கள் புகைக்குழாய் வழியாக
நுரையீரலுக்கு அனுப்பலாம்..
இப்போது உங்களோடு நானும்
ஒன்றாகி விடுவேன்.
நம்மோடு சேர்ந்து ஞானமும் தூளாகிவிடும்..
கலப்படமில்லாத கஞ்சா இலைகளை
புகைத்த என் பாட்டனின்
எலும்பு கூடுகள் கிடைத்திருக்கிறது..
அதன் துளை வழியாக
இன்னும் எரிக்கப்படாமலிருக்கும்
கஞ்சா துகள்களை காண்கிறேன்..
வனத்தின் ஊடே நடந்து
கற்களை மூட்டி வரும் தீயில்
அவ்விலைகளை புகைக்கிறேன்..
எலும்பு கூடுகளின் வழியே நான்
இழுக்கும் புகை என்னை பிரபஞ்சத்தின்
உச்சத்திற்கு கூட்டிச்சென்று
மீண்டும் வனத்தில் தள்ளியது..
அங்கே மனிதனால் வேட்டையாடப்பட்ட
பாட்டனின் மண்டை ஓடு கிடந்தது…
அதன் பிளவுகளினூடே பெறும்
இருமல் குரல் ஒன்று கேட்டது..
என் நாசியில் துளைத்த அந்த புகைநெடி
அது பாட்டன் மிச்சமிட்ட போன கஞ்சாவின் நெடி தான்..
முதலில் பசியெடுக்க
கஞ்சாவை இழுத்தார்கள்
இப்போது பசியெடுக்காமல்
அதனை இழுக்கிறார்கள்.
முன்னர் ஓர் இலை கசந்தது.
இன்னும் அதே இலை கசக்கிறது.
கானகத்தின் வேர்களின்
மொழியை அறிய கஞ்சா இழுத்த
முத்தவர்களுக்கு தெரியும்
எது எவ்வளவு தெளிவோடு
எவ்வளவாய் இருக்க கூடாதென்று.