1.
மூணு வேளை சோறு
சொற்ப சம்பளம்
பட்டணத்தில் ஒரு ஓட்டலில்
வேலை செய்யும்
அவனிடம்
அவன் ஊர் அடையாளம்
கேட்டு பாருங்கள்
அவன் கை அகல விரித்து திசைகள்
சொல்லும் பொழுது
அவன் பூமி விரிவதையும்
மேல் கீழ் உடலசைவில்
ஒரு ஆதி ஆல மரம் காற்றில் ஆடுவதையும்
கண்கள் விரிந்து பூக்கும் போது
ஒரு முழுமையான ஆறு ஒன்றும்
ஓடக் கண்டடைந்தால்
நீங்கள் பாக்கியவான்.
2.
அடிக்கடி ஊர்ந்துக் கொண்டிருக்கும்
கனவுக்குள்
ஒரு பறவையென அலைகிறேன்
பறத்தலின் தடைகள்
வெளிகளுக்குள்.
சிறகின் மைய நரம்புகள் பிரிந்த
இறகுகளை மீண்டும் மீண்டும்
தைத்துக் கொள்கிறேன்
உயிர் ஊசி கொண்டு.
மிச்சமிருக்கும் தூரத்தை கடப்பதற்குள்
கலைந்த கனவின்
ஒரு பகுதியில்
உதிர்ந்த இறகுகள்
என் படுக்கையறையில்.
ஆயினும். இமை விலகாத நான் அந்த
கனவாகியே போகின்றேன்.