cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 6 கவிதைகள்

வீடற்று வாழ்தல்

மனுஷி
Written by மனுஷி

றவையின் சிறகுகளை கொண்டு
வெளியேற வேண்டும் மாயா.
நான்கு சுவர்களுக்கு மத்தியில்
உறங்கி எழும்
வாழ்வு சலிக்கிறது.

கனவு தேசத்தில்
தேசாந்திரியாய் இருக்கிறேன்.
நெடிதுயர்ந்த மலையின்
ஒற்றையடிப் பாதையில்
தனித்து நடந்து செல்கிறேன்.
இடதுபுறம் சலசலத்து
ஓடிக் கொண்டிருக்கிறது நதி.
எதிர்ப்புறத்தில் பாசி படிந்த
பாறையிலிருந்து
மலையின் கண்ணீரென கசிகிறது மெல்லிய ஈரம்.
ஒரேயொரு புத்தகப் பையுடன்
இலக்கற்று, ஓய்வற்று
மலைப்பாதைகளில்
போய்க் கொண்டிருக்கிறேன்.
கால்கள் நடை தளரும் சிறுகணமொன்றில்
அகண்ட பாறையொன்றின்மேல்
மல்லாந்து படுத்துக் கொள்கிறேன்.
நதியின் சிறு இசையே தாலாட்டாய் மாறிப் போக,
இரவுக்குள் கரைந்துவிடுகிறேன்.

நட்சத்திரங்களும் மின்மினிகளும்
மின்னித் திரியும் அவ்விரவுகளில்
பசிக்கவேயில்லை.
யாருக்கும் வாடகை தரவேண்டியதில்லை.
மனிதர்கள் யாருமற்ற அப்பிரதேசத்தில்
உடலை மேயும் கண்கள் இல்லை.

வீடற்று வாழ்தலென்பது
பிரபஞ்சத்தைத் தன்வசமாக்கிக் கொள்ளும் தந்திரம் தானே மாயா.

வீடெனும் சொல்லிலிருந்தும்
வெளியேற வேண்டும்.

ஆனால் மாயா,
எனது வருகைக்காக வாசல் பார்த்துக் காத்திருக்கும் நாய்க்குட்டியின் கண்களை
நான் பார்க்காதிருக்க வேண்டும்.
பூனைக்குட்டிகளின் பசித்த குரலைக் கேட்காமலிருக்க வேண்டும்.


Feature Image Courtesy : The New York Times

About the author

மனுஷி

மனுஷி

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரைச் சார்ந்த மனுஷி-யின் இயற்பெயர் ஜெயபாரதி. தற்போது இவர் புதுச்சேரி பல்கலைகழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருக்கிறார். யுவ புரஸ்கார் (இளம் சாகித்ய அகாடமி) என்னும் தேசிய அளவிலான விருதினை 2017-ஆம் ஆண்டில் பெற்றவர். இவரது படைப்பான ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள் என்னும் நூலே இவருக்கு இந்த விருதினைப் பெற்றுக் கொடுத்தது. முத்தங்களின் கடவுள் நூலுக்காக சென்னை இலக்கியக் கழகத்தின் இளம் படைப்பாளி விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

இதுவரை எழுதியுள்ள நூல்கள்:
குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்-மித்ரா பதிப்பகம் (2013),
முத்தங்களின் கடவுள்-உயிர்மை பதிப்பகம் (2014),
ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள்-உயிர்மை பதிப்பகம், (2015),
பின்பற்றவிரும்பும் கவிஞர்---கவிஞர் இளம்பிறை,
கருநீல முக்காடிட்ட புகைப்படம் - வாசகசாலை பதிப்பகம் (2019),
யட்சியின் வனப்பாடல்கள் - வாசகசாலை பதிப்பகம் (2019)

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
ஜெயபால் பழனியாண்டி

வாழ்த்துகள்… வீடற்று வாழ்தல் கவிதை பாஷோவை நினைவூட்டியது…

You cannot copy content of this Website