வயதுகனிந்த பாட்டி
நாவல்பழக் கூடையை
சுமந்து செல்கிறார்.
எழுதிய இந்த வரி
கதையின் ருசியை கூட்டலாம்…
அதை வாங்கும்போது
துயரத்தின் சுவையும்
சேரவே செய்கிறது.
உப்பில் ஓய்வெடுக்கும்
கடலிடம் கதைக்கேட்டேன்
அது சுவையால்
பதில்சொல்லிவிட்டு
அமைதியாகிவிட்டது.
சுவைபோல் நாக்கில்
ஒட்டிக்கொண்ட வாக்கியத்தை
மனம் கதைபோல் எழுதிப்பார்க்கிறது.
வயலில்
உழைத்துக்கொண்டிருந்தவரிடம்
பசிநேரத்தில் கதைபேச
எத்தனித்தபோது
அவர் வியர்வை
கையில் விழுந்து பதிலளித்தது.
பசிக்கு ஏது சுவை.
பசிக்கு ஏது கதை.
இரவு காவலாளியை
அதிசயமாக சந்தித்துகோட்டேன்
உறக்கம் வராத இரவை
எப்படி கடந்து செல்வீர்கள்.
உறங்காத இரவு
நிறைய கதை சொல்லும்
கேட்டுக்கொண்டிருப்பேன் என்றகிறார்.
நடிகன் நடிப்பால்
மேடையில் கதை சொன்னான்.
கைதட்டல்கள் அவன்
வயிற்றுக்குச் சோறிடுகிறது.
பேய்மழை இரவில்
குருடன் துயரக்கதையை பாடுகிறான்.
பல கதாபாத்திரங்களை சுமந்து
பதட்டத்துடன் அசைந்து
மெல்ல நகர்கிறது இரயில்வண்டி
அந்த துயரக்கதையை
ஆனந்தமாக கேட்டப்படி.
மதிலுக்கு இருபுறமும்
கதைகள் இருக்கும்
அது பூனைக்கு மட்டுமல்ல
மனிதம் பேசும் மனிதனுக்கும்.
மகத்துவம் மனிதத்திற்கு
கதை சொல்லிக்கொண்டேதான்
இருக்கும்.
உங்களை போல் நானும்
நிதானமாகக் கேட்கிறேன்.
Art courtesy : SpaceFrog Designs