ஆதிக்காலத்தில்,
இயற்கையின் பெருவெளியில்
நீயும் நானும் மட்டும்
ஆதாமென்றும் ஏவாளென்றும், …..
அன்று நாம் ஏதுமறியாதவர்கள்
மௌனமாக இறுகிக் கருத்த இரவு
சொற்களுக்கு முன்னான சிற்றசைவை எழுதியபடி
வெண்கிரணங்களைப் பொழிந்தது பால்நிலா
அருகருகே அமர்ந்திருந்தோம்.
வண்டு துளையிட்ட
மூங்கிலின் வழியே காற்று
தனிமையின் உச்சத்தை
நெட்டொலியாக்கிக் கறங்கிக் கொண்டிருந்தது
ஆதிஇசை நீட்சியில்
ஒலித்த துயர்களைய
இறுக அணைத்துக் கொண்டோம்.
இரவை மலர்த்தியிருந்த மலர்களில்
பனித்துளி ஒன்றிச் சுவையூறிய நாளில்
நிரம்பித் தளும்பிய
யௌவனத்தின் பெருக்கமாக
முதல் முத்தமறிந்தோம்
இடையீடில்லா இன்தனிமையில்
காதல் நதியென பெருகி
வழிந்தபடியே இருந்தது
அறிவின் கனி
அருகழைத்தபடி இச்சை வழங்கியது
நீ பதறித் தடுப்பதற்குள்
பாதி உண்டுவிட்டேன்
ஆடையும் வேட்டையும்
ஆயமும் நட்பும்
பகையும் துரோகமும்
கயமையும் கலைகளும்
அறமும் நெறிகளும்
ஒவ்வொன்றாக வந்துகொண்டே இருக்கின்றன
இடையீடுகள் இடையூறுகள்
எங்கும் எங்கெங்கும், …..
அன்று தொலைத்த
நம் தனிமையின் பொழுதுகளை,
பல்கிப் பல்கி மனிதர்களில் நிறைந்தும்
பிறவிகளாகப் பெருகியும்
மீண்டும் மீண்டும் தேடுகிறோம்
உணர்வு தொடும் கவிதைகளில்
உச்சம் தொடும் இசையில்
காதற்கனலும் உன் ஒற்றைப் பார்வையில்
அருவமாய்க் கூடுகிறது
ஆதிகாதற்பொழுதுகள்
இன்று காதலர்தினமாம்
நம்மிலிருந்து தொடங்கிய உணர்வை
நடன விருந்தொன்றாய்ப் படைத்திடலாம்
வருகிறாயா?
Art Courtesy : indianartideas.in