குட்டிப்போட்ட பூனை போல்
துண்டின் நுனியால் மீசையிடையே உருட்டியபடி
வடக்காலயும், தெக்காலயும் நடப்பார் அப்பா
மெதுவாக விடுதியிலிருந்து
விருந்தாளியாக வந்து
வாரவிடுமுறையில் தூங்கும்
காலையில் என்னொருவனுக்காக..
குத்தவைத்து தலமாட்டிலமர்ந்து
‘யப்போ.. சிக்கன் வேணுமா இல்ல பீப், மீன் எடுக்கவா… ?’
கண்விழித்ததும் கேட்பார் தலைகோதிவிட்டபடி
‘பீப்பே எடுத்து பாதிகுழம்பும், கிரேவியுமா வச்சிடுப்பா’
‘ம்ம்.. சரிபா நீ தூங்கு தூங்கு…’
தேங்காய் சாறில் சோறு பொங்கி
பீப் கறிவைத்து முடிக்க உதவுவார் அம்மாவிற்கு
பல்தேய்க்க அனுப்பிவிட்டு
அடுப்பாங்கரையில் அம்மாவின் உதவியுடன்
குவாட்டரை ருசிபார்த்துவிடுவார்
போதையில் பல்லைக்கடிக்கும் இயல்போடு
கறிவைப்பார் சட்டியில் ஈரலைத்தேடியபடி
எழும்பகடிச்சு உறிஞ்சி திண்ணு,
ஈரல் உடம்புக்கு நல்லதென ஊட்டிவிடுவார் சாராய வாசனையோடு….
அம்மா உணவகம் செல்லும் வழியில்
பீப் பிரியாணி கடைமுன்
அப்பாவின் நியாபங்களை அசைச்சு
அழுதபடியே திரும்பி நடக்கிறேன்
பட்டினியோடு..
அப்பனின் ஆசை
அன்பாலென் வாலிப வயதிலும்
எப்போதாவது ஊட்டி விடுகிறான்..
அதே கைகளால்
அடுத்தவன் பீயை
எப்போதும் அள்ளியதை மறந்து…
Art Courtesy : R RAJKUMAR STHABATHY