cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 6 கவிதைகள்

மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்


1. நித்தியாவும் நிர்மலாவும்

வளர்ப்புச் செடிகள்
வளர்க்கும் அளவிற்கு
வாசலில் இடம்
எப்போதும் இருந்ததில்லை

அதிகபட்சமாக வளர்த்த
வளர்ப்புப் பிராணி என்றாலும் கூட
அது அயிரை மீன்கள் தான்

மற்ற மீன்கள் எல்லாம்
தெருவழியே விற்க வருபவர்
கொண்டு வரும் போது
மரித்தே இருக்கும்
அயிரைகள் மட்டுமே
குறைவாக இருக்கும் நீரிலும் உயிரோடு துள்ளிக் கொண்டிருக்கும்.

தாத்தனுக்குப் பிடிக்கும் என்று
குழம்பு வைக்க பாட்டி வாங்கிய
அந்த அயிரை மீன்களுள்
ஐந்தாறை
அவளுக்குத் தெரியாமல் எடுத்து
தண்ணீர் நிரப்பிய போத்தலில் இட்டு
பொரி போட்டு அதை வளர்த்த போது
கிடைத்த அந்தச் சிறுவயது மகிழ்ச்சி நித்தியமாக இருந்தது.

ஓரிரு வாரங்கள் ஆன பின்
அந்த அயிரைகள்
செத்து மிதந்த போது
சிந்திய அந்தச் சிறுவயது கண்ணீர் நிர்மலமாக இருந்தது.


2. வாரணம் ஆயிரம்

நிலத்தின் ஆகப்பெரிய பிரம்மாண்டம் யானை தான்
‘வாரணம் ஆயிரம்’ சூழ வந்து
வாசுதேவன் தன்னை வதுவையாக்க வர வேண்டும் என்று
வாத்சல்யம் கொள்கிறாள் ஆண்டாள்
பரணிக்கு இலக்கணம்
கூற வந்த பாட்டியல்
‘ஆனை ஆயிரம்’ என்று தொடர்கிறது
ஆக இலக்கியமும் இலக்கணமும்
ஆயிரம் யானைகளின் பிரம்மாண்டம்

குவளைகள் பூத்த கயத்தில்
குவளை மலரில்
தேன் உறிஞ்சும் தும்பியையும்
கயத்தில்
நீர் உறிஞ்சும் யானையையும்
ஒருசேர பார்த்த ஒருவன்
துதிக்கையை தும்பிக்கை என்றான்

இரு பிறைகள்
கிழக்காம்தலையாக
இருப்பது போல் இருக்கும் தந்தங்களை
மருப்பு என்றான்
தான் சொல்லிய உவமைக்கு
மறுப்பு சொல்லிவிடக்கூடாது
என்பதற்காக

அத்திப்பூத்தது போல்
அரிதாகத் தான்
தெருக்களில் யானையைக்
கூட்டிக் கொண்டு
வருகிறான் பாகன்
அதனால் தான் ஆனைக்கு
அத்தி என்றதொரு பெயர் வந்ததோ?

உருள்பெருந் தேராக இருந்தாலும்
அச்சாணி சிறியது தான்
உருவத்தில் பெரிய யானைக்கும்
கண்கள் சிறியது தான்
உற்சவர் தேர் ஏறி
வீதியுலா வருவதைப் பார்ப்பதும்
உல்லாசமாக ஒரு குழந்தை
யானை மீது ஏறி
சவாரி செய்வதை
அதன் தகப்பன் பார்ப்பதும்
ஒன்று தான்.


3. ஒப்புமை

அந்தரத்தில்
சிறகை படபடவென அடித்து விட்டு
கொஞ்ச தூரம்
சிறகை அசைக்காமல்
பறக்கும் பறவை
சைக்கிளை நிரம்ப தூரம்
வேகமாக மிதித்து விட்டு
கொஞ்ச தூரம்
பெடலை மிதிக்காமல்
இரு கைகளையும்
கைப்பிடியில் இருந்து
விடுவித்து விட்டு
ஓட்டும் சிறுவன்.


Art Courtesy : sabonhomeblog

About the author

மு.ஆறுமுகவிக்னேஷ்

மு.ஆறுமுகவிக்னேஷ்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website