வழக்கத்தில் வழக்கொழிந்த
குட்டிக் குட்டி
கதைகளைச் சொல்லி வந்தாரவர்
ஒரு ஊரில் என துவங்கும்
எந்தக் கதையும் அறியாதவர்
அன்று…. அவர்
கூழுக்கு பாடியதும்
ஸ்கூலைக் கண்டு ஓடியதும்
கண்மாயும் கரட்டுமேடுகளும்
கதையாய் ஆனது
அம்மன் கோவில் திருவிழா
ஆட்டுக்குட்டி வரை
காற்றோவியமாக்கியிருந்தார்
கருப்பையா
அளவெடுத்து நீட்டி நுணுக்கி
என் கதையை
என்னிடத்திலே துவங்கினார்
அந்த குரல் பழுத்தவர்
இன்று…
அந்த புகைப்படத்தைக் காட்டி
யாரென கேட்டு நின்றாள்
கதை கேட்கும் பருவத்தில்
என் மகள்
இலக்கணப்பிழையோடு
கதை சொல்லியானேன்
நிழற்காட்சியாயிருந்தவர்
நிஜமாகிப்போனார்
என் வாய்மொழியில்
என்னவோ தெரியவில்லை
இன்னும் தூங்கவில்லை அவள்
ஒருவேளை
என்சாயலில் அவரைக்
கண்டிருக்க கூடும்.
Art Courtesy : RAJKUMAR STHABATHY