cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 6 கவிதைகள்

ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்


1. 

வீடு

நரக வீட்டின்
வாசமறிந்தவர்கள்
இருக்கிறீர்களா
அதன் வெளிறிய வனப்பில்
அனுதினம் உறங்கும்
சாமத் தோழமையைக்
காணும் வேளை
பலவும் பகிர இருக்கிறது

விளக்கின் மந்த ஒளியில்
இருளைக் கக்கும்
விழிகளோடு அவன்
என்ன பேசிக் கொள்வான்
என்று கேட்கவேண்டும்

காலம் முற்றி
பூமி அழைக்காப்
பேருடல்களைப் போற்றியிருக்கும்
ஈரக் கந்தலின்
நாற்றம்
அவனுக்கும் பழக்கமா
என்று பார்க்கவேண்டும்

சொல்லுக்கு
முன்னும் பின்னும்
க்குகள் சேர்த்து
கழுத்தை நெறிக்கும்
உறவுகளில்
யார் நெருக்கம் என்று
விசாரிக்கவேண்டும்

கவலையில் தோய்ந்த
முகங்களைச் சிரிக்க வைக்க
யாராவது வருவார்களா
என வாசலைப் பார்க்கும்
வறியவர்,
அவன் வீட்டிலும் உண்டா
என்று கேட்கவேண்டும்

பதிலில்லை என்றாலும்
பரவாயில்லை
அவனாவது
என்னிடம்
வீட்டைத் துறந்தால்தான் வீடு
என்று சொல்லாதிருப்பான்.


2.

நான்
போலி புன்னகைக்கும்
உண்மையாய்
முத்தம் தைக்கப் பழக்கப்பட்டவன்

எந்த முறைப்பும்
என்னை முகஞ்சுழிக்க
வைத்ததில்லை

எந்த இழிச் சொல்லும்
என்னைக் கூன வைத்ததில்லை

யாருடைய
ஒவ்வாமையும்
என்னை அலைக்கழித்ததில்லை

பொய்யாய் வருடும்
கரிசனை விரல்களையும்
கோதிவிடவே செய்திருக்கிறேன்

முகம் புதைக்க
மார்பை ஏந்தி
பூட் காலால்
மிதிபடுகையிலும்
தடவிக் கொடுக்க மட்டுமே
கை ஓங்கியுள்ளேன்

எனக்கு மட்டும் ஏன் இப்படியென
ஒருபோதும்
வாய் திறந்ததில்லை

நான் இந்த
அடிமைத்தனத்திற்குப்
பழகிவிட்டேன்

என்னைத் தவிர
வேறு யாரும்
இதில்
விழக்கூடாது என்று
மெய்யாகவே விரும்புவதால்
சத்தியமாகவே
எனக்கு மட்டும்
ஏன் இப்படியென
ஒருபோதும்
கேட்கப் போவதில்லை.


3.

எனக்கு
அழுகையை
எழுதப் பிடிப்பதில்லை
என் சோகமும்
துயரும்
யாருக்கு வேண்டும்
கூனிகளைப் பார்த்து
உச்சுக்கொட்டும் கூட்டம்
உள்ளூற மகிழ்வதன்றோ இயல்பு

ஆனாலும்
நான் எழுதுவேன்
என் காயங்களைக் காகிதங்கள்
உறிஞ்சிக் கொள்கின்றன
பிரிண்டில்
அவை அச்சாகும்போது
சோகமுறிவு மருந்து
பூசப்படுகிறது

அதை
எந்தச் சந்தை வீதியிலும்
யாராலும் வாங்கிவர இயலாது

என் ரணவாடையின்
புகை மணத்தின்மேல்
அவ்வளவு
ஆசை என்றால்
இத்தாள்களை
முகர்ந்து பாருங்கள்
ஈர வீச்சின் நெடி
பிடிக்காமல் போகுமுன்.


 

About the author

ஜார்ஜ் ஜோசப்

ஜார்ஜ் ஜோசப்

ஜார்ஜ் ஜோசப் என்கிற பெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் ஜார்ஜ் இம்மானுவேல் ஜோசப். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ளார். கவிதை, சிறுகதை, விமர்சனம் என இலக்கியத்தில் இயங்கி வருகிறார்

Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments

அருமை..👏👏👏👍

You cannot copy content of this Website