cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 கவிதைகள்

சுகன்யா ஞானசூரி கவிதைகள்


  • நவதிசை.

ஒரு சட்டகத்தின்
நான்கு மூலைகளில்
ஆளுக்கொருவர் அமர்ந்துகொண்டார்கள்
இப்போது திசைக்கொருவர்
அமர்ந்திருப்பதாகச் சொல்லப்பட்டது
வட்டமான பூமியில்
சட்டகத் திசைக்குறிப்பு
எப்படி சாத்தியம்?
வஞ்சிக்கும் வடக்கைப் பற்றி
ஒருவர்
உரையாடத் துவங்கியிருந்தார்
மேற்கைப் பற்றியும்
கிழக்கைப் பற்றியும்
எதிரெதிரான விவாதங்கள் காரசாரமாக
முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன
இதுவரையிலும் அமைதியாக இருந்த
தெற்கு மேலும்
நான்கு உபதிசைகளின்
வாழ்க்கைப்பாடுகளுக்குமாக சேர்த்து
உரையாடத் துவங்கியது.
தூய இலக்கியவாதிகளின் கூற்றொப்ப
அரசியல் வேண்டாமென
திசைக்கொன்றாய் ஆதங்கம் கொண்ட
திசைகள் இப்போது
புதிய திசையொன்றைக் குறித்து
உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருந்தன.
நவதிசையென்பது
அகதிகளின் துயரத்தின் திசையென
சமகாலக் கவியொருவன் எழுதியிருப்பதாக
சுட்டிக்காட்டி திசைகளைப் பார்த்து
சட்டகங்கள் சிரித்துக் கொண்டன.


  • கூராய்வு

பாலினக் கூராய்வில்
கிடத்தப்பட்டிருக்கிறார்
மோனாலிசா
டாவின்சியின்
நூற்றாண்டுத் தூரிகைகள்
தளர்வுற்று நடுங்குகின்றன
நிரந்தரம் நிரந்தரமின்மை
என்பவற்றுக்கு நடுவே
நிச்சலனமற்றுக் கிடக்கிறது
நாடற்ற ஓரினம்
ஆதியும் அந்தமுமாய் ஆனவரின்
நர்த்தனங்களுக்குள்
ஒன்றும் ஒன்றும்
மூன்றாய்த்தானே தெரிகிறது?
ஆண்பால் பெண்பால்
என்பவற்றிற்கு நடுவே
வீறுகொண்டு எழுந்துள்ளது
மூன்றாம் பாலினம்.
கோடுகள் வட்டங்களென
அகழப்பட்டுக் கொண்டிருக்கும்
வலிகளைத் தாண்டி
கிழிந்த கேன்வாஸில்
புன்னகைத்தபடி இருக்கிறார்
மோனாலிசா.


 

About the author

சுகன்யா ஞானசூரி

சுகன்யா ஞானசூரி

இலங்கையின் யாழ்ப்பாணம் மாகாணத்திலுள்ள அச்சுவேலி வடக்கில் பிறந்த ஞானசூரி முதுகலை அறிவியல் நுண்ணுயிரியல் துறை படித்தவர். 1995இல் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கும், 1996இல் வன்னியை விட்டு தமிழ்நாட்டுக்கும் புலம்பெயர்ந்தவர். தற்போது திருச்சிராப்பள்ளியிலுள்ள தனியார் ஆய்வகத்தின் நுண்ணுயிரியல் துறையில் தொழில்நுட்புனராகப் பணியாற்றுகிறார்

இவரது முதல் கவிதைத் தொகுப்பு : அலைகளின் மீதலைதல் (2008) , இரண்டாம் கவிதைத் தொகுப்பு : நாடிலி (2021)

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website