- தோள் சுமக்கும் மகன்
எனது மகன் நீல வானைக் கடலை
கடல் மணலை அருவியைக் கூழாங்கற்களைக்
காடு மலை மேகம் ஆறு
மரம் செடி கொடிகளைத் தும்பிகளை வண்ணத்துப்பூச்சிகளைப்
பறவை விலங்குகளைச்
சீறூர் பேரூரைப்
பேரூரின் ஓடைகளை அனைத்தையும்
தன் தோள் மீது சுமந்து பள்ளிக்குச் செல்கிறான்
ஒவ்வொன்றையும் வளாகத்தில்
நேர்த்தியாய்ப் படைக்கிறான் வைக்கிறான் நடுகிறான்
குழி முயலோடு விளையாடுகிறான்
பள்ளி முடிந்ததும்
அவன் எதனைத் தன் தோள் மீது
சுமந்து சென்றானோ அவற்றையே திரும்பக் கொண்டு வந்து
வீட்டில் படைக்கிறான் வைக்கிறான் நடுகிறான்
இப்படித்தான் வீட்டிலிருந்து பள்ளிக்கும்
பள்ளியிலிருந்து வீட்டிற்கும் சுமப்பதும் இறக்கி வைப்பதுமாக இருக்கிறான் .
- நற்செய்தி தாள்கள்
நீல நிற வானத்தின் கீழ்
தினம் தினம் பரிசோதிக்கிறார்கள் என்னை
என்னிடம் ஏதாவது நற்செய்தி உண்டா என்று
எத்தனை நாள் அவர்களிடத்தில் சொன்னதுண்டு
நற்செய்தி ஏதுமில்லை என்று
விட்டபாடில்லை
நான் அணிந்திருக்கும் ஆடைகளைத் தேடிப் பார்க்கிறார்கள்
என்னிடம் இருக்கும் சிறு பெட்டியைத் திறந்து காட்டு என்கிறார்கள்
வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பார்க்கிறார்கள்
பருந்து கண் கொண்டு
இல்லை என்று சொன்னது மட்டும் நூறு முறை இருக்கும்
இப்படியும் விட மறுக்கிறார்கள்
அப்படியும் விட மறுக்கிறார்கள்
தோண்டித் துருவிப் பார்த்து
மேஜையின்
மீது இருந்த எழுதுகோலையும்
சில தாள்களையும் தூக்கி தூர எறிகிறார்கள்
அதிலிருந்து எழுந்து காற்றின் திசைகளில் பறந்து சென்ற தாள்கள்
நற்செய்தியைப் பரப்புகிறது என்கிறார்கள்
நான் என்ன செய்வேன்
என்னிடம் இருக்கும் வலிமை வாய்ந்தது
எழுதுகோலும் சில தாள்கள் மட்டும் தான்
வேறு ஏதுமில்லை
நான் என்ன பெரும் குற்றத்தின் பாதகமிழைத்தவனா?
என்னை நீங்கள்
பின் தொடர்ந்து கண்காணிப்பதற்கு?
- வேப்பம் பூவாகும் மல்லிகை
நெல்லிக்கனியைப் புசித்து விட்டு
நீர் அருந்தினால் இனிக்குமே
அப்படி அல்ல அவளது வாழ்க்கை
கருப்பங்காட்டிற்குச் சென்று
அதன் தோகை கிழிக்க
உடல் அறுபடுமே
அப்படியானது அவளது வாழ்க்கை
சுட்ட செங்கற்களை அடுப்புக்கூட்டி
அரிசியைத் தேடுகிறாள்
உலை கொதித்துக் கொண்டிருக்கிறது
வற்றிய அவளது பானை
தானியக் களஞ்சியமாய் நிறையவில்லை
ஒரு அன்பின் நிமித்தம்
இரண்டே இரண்டு முத்தங்கள்
அவள் வீட்டு வேப்பமரம்
முன் வாசலில் கிளைபரப்பிப்
பூத்துக் கொண்டிருக்கிறது
அவள் வேப்பம்பூவைப் பார்க்கிறாள்
நாவில் கசக்கும் பூ
மல்லிகைக் காடாய் மணக்கிறது
அவள் மேனியில்.