cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 கவிதைகள்

ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்


1. அருட்பெருஞ்சோதி

கண்ணாடிக் குடுவைக்குள்
ஏற்றி வைத்த தீபத்திடம்
காணக் கிடைப்பதில்லை
காற்றின் பாடலுக்கு
அபிநயம் பிடிக்கும்
சுடரின் திருநடனங்கள்

அவள் ஏற்றி வைத்த
தீபத்தின் சுடர் ஒன்று
தீயின் நாவோடு
காற்றின் எச்சில் பட்டு
என்னிடம் ஏதேதோ
பேச முனைந்தது
மொழிகள் அற்ற ஒரு வெளியில்

திரியின் நுனியில்
சுடர் ஆடும் துணங்கைக்கு
எண்ணெய் சதங்கை ஆகட்டும்

தீபத்தின் சுடராயினும்
தீட்சண்யா குட்டியின் தலையாயினும்
குனிந்து தான் ஆக வேண்டும்
காற்றலையையும் கடலலையையும்
தலைக்கு மேல் முறையே கடத்த

அவள் கவிதை படிக்க
தலைகுனிவதைப் போலத் தான்
காற்றின் திசையைப் படிக்க
தீபச்சுடரும் தலைக்குனிகிறது

சுடரை அணைக்காமல்
காற்றுக்கு மட்டும் தான்
தீபத்தைத் தீண்ட தெரிந்திருக்கிறது

அவளைப் பொருத்தவரை
தீபங்கள்
அடர் இருளில் பாலைப் போல்
எண்ணெய்யை
மிடறு மிடறாகப் பருகும்
பூனைக்குட்டிகள்

எண்ணெய்யோ நெய்யோ
எவ்வளவு தான் இருந்தாலும்
சுடரைத் திரியின் நுனியில் நின்று
ஆட வைக்க
காற்றுக்கு கனிவு வேண்டும்

எப்போதும் நீ
என்னோடு இருக்க வேண்டும்
தீபத்தின் ஒளியோடு இருக்கும்
வெப்பம் போல

நிலத்தில் இருந்து எடுத்து
நதியில் தீபத்தை மிதக்க விட்டு
அவள் ஒன்று சேர்த்து விட்டாள்
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்
அனைத்தையும்

மாமலையையும் மறைத்து விடும்
பேரிருளையும் வென்று விடும்
மணிமுடியில் ஏற்றிடும்
ஒரு தீபம்

முழுமதியையும் ஈரக் காகிதமாக்கும்
கார்த்திகைக் கடுமழையில்
இது அறுமீன் சேரும்
அகலிருள் நடுநாள்.

2. அம்பறாத்தூணி

அவள் தனது கூந்தலில் சூடிய
மஞ்சள் நிற ஒற்றை ரோஜா
அவளுக்குத் தெரியாமல்
வீதியில் விழுந்து விட்டது

விழுந்தது மலரல்ல
கூந்தல் எனும் கரும்புவில்லிலிருந்து
புறப்பட்ட மாறன் கணை என்பதுவும்
அவளுக்குத் தெரியாது

வீதியில் தவறி விழுந்து விடும்
ஒற்றை ரோஜாவைச்
சுமக்கும் கூந்தல்கள் எல்லாம்
மன்மதனின் அம்பறாத்தூணிகள்.

3. அலாதி அன்பே

மழையும் வெயிலுமாய்
அடி நீயும் நானும்
சந்தித்த போது
மழையில் வெயில் நனையும்
போது தோன்றும்
வானவில்லாய்
வந்து சேர்ந்தது நேசம்

தான் நேசிக்கும் பெண்ணை
முதன் முதலில்
சேலையில் பார்க்கும்
ஆண்களின் அனுபவம் அலாதியானது

சுரிதாரில் மட்டுமே
அதுவரைக்கும் பார்த்தவளை
முதன் முதலில்
சேலையில் பார்த்ததை
என்னவென்று சொல்வது?

அனுதினமும் மழையாக வந்தவள்
அன்று மட்டும்
ஆலங்கட்டி மழையாக வந்தாள்
என்று சொல்லலாம்

அலையாக வந்து
தினமும் பாதங்களை உரசுபவள்
அன்று மட்டும் கொஞ்சமாக
கடலுக்குள் உள்ளிழுக்கும்
அலையாக வந்தாள்
என்று சொல்லலாம்

நித்தமும் பிறையாக வந்தவள்
அன்று மட்டும் வானம் கொள்ளாத
முழுமதியாய் வந்தாள்
என்று சொல்லலாம்

சேலை கட்டி இருந்தாலும்
மெல்லிடையை மறைக்க
அன்னநடையே நீ
எடுத்துக் கொண்ட சிரத்தையில் தான்
சொக்கிப் போனேன்
தெரியாத வரைக்கும்
அழகியலாய் இருப்பது
தெரிந்த பின்னர்
ஆபாசம் ஆகிவிடும் என்பதை
அறியாதவள் அல்ல நீ

மொத்தத்தில்
முந்தானை முடிச்செல்லாம்
துப்பட்டாவால் போட முடியாது

காதலி என்று சொல்லிக் கொள்ள
ஒருத்தியும் இல்லையென்றாலும்
மனதிற்குப் பிடித்தவள்
என்று ஒருத்தி
இருந்துதானே தொலைக்கிறாள்.


 

About the author

மு.ஆறுமுகவிக்னேஷ்

மு.ஆறுமுகவிக்னேஷ்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website