மாலை நேர சூரியன்
மேற்கில் மறையும் வேளை
வானின் உயரத்தில் கூட்டமாய் பறக்கும் பறவையொன்றிலிருந்து
இறகொன்று உதிர்ந்து
கண்ணாடி தொட்டிக்குள்
நீந்தும் வண்ணமீனைப்போல
கிழக்கும் மேற்குமாய்
அசைந்து சில நொடி பயணத்தில்
பள்ளியிலிருந்து வீடு திரும்பும்
பள்ளிச்சிறுமியின் புழுதிபடர்ந்த காலடியில் விழுந்தது
அந்த ஒற்றை இறகு.
ஆச்சர்யத்துடன் அதிசயமாய்
குனிந்து எடுத்த சிறகை
சிறுவிரல்களின் பிடியில்
அதையெடுத்து அன்னாந்து பார்த்தாள்.
வடக்கு நோக்கி வானில் பறக்கும் வானம்பாடிகளை…
சிறகுகள் உதிரும்போது பறவைகளுக்கும் வலி இருந்திருக்குமோ!
வலியோடு எப்படி இவைகளால் மட்டும் பயணிக்க முடியுமோ!
என்ற ஐயத்தில்அறிவியல் புத்தகத்தைப்பிரித்து
அதன் முப்பத்தி ஏழாவது பக்கத்தில் அந்த சிறகினை மூடிவைத்தாள்.
கூடுகளே உலகமென
இருக்கும் குஞ்சுகளுக்கு
இரைகளோடு பறக்கும் பறவைகளுக்கு
சிறகுகள் உதிர்வதுகூட
உணராமல் செல்வதை
போல் அல்லாது….
சிறுமி நன்றாகவே
உணர்ந்திருந்தாள்
மயில் இறகினைப்போல
இதுவும் புத்தகத்தினுள்
குஞ்சு பொரிக்காது என
யாரோ சொன்னதை….
Art Courtesy : etsy.com