ஒரு ஊரில்
ஒரு தகப்பன் , ஒரு குட்டி பையன்.
வீட்டு மரமொன்று இலைகள் விட ஆரம்பித்தது.
அதன் சுதந்திர நோக்கம் கருதி
எல்லா இலைகளுக்கும்
பறவை என்றே
பெயர் வைத்தார் அப்பா.
அவரை நகைத்தபடி
பறந்து பறந்தவை போய்க்கொண்டிருந்தன .
பார்த்துக்கொண்டிருந்த பையன்
கையோடு மரத்திற்கு
கூடு என பெயர் வைத்தான்.
அவ்வளவுதான்.
கதை முடிந்தது.
எறியப்பட்ட சிறு… கல்லில் பூத்த
சலதாரை வழியே
தன் பேராழத்தை அகழ்ந்து பார்க்கிறது
ஏரி
எறிந்த நீங்களோ எதையும் மேல்கிடையாக அவதானிப்பவரென அதனிடம் சொல்லிவிட்டேன்
அற்புதத்தை தாரை வார்க்கும் கருணைக் கைகளை தாழ்ந்துரைப்பது பாவமென
ஒரு நீர்வளையமாய் தன்னை
“நும்பாற் சரண் சரண் ” என்றே அண்மித்து வருமதை
உம்மிடம் நான் மறைக்கவில்லை
அது அப்படித்தான்
நான் சொல்கிறேனென்றெல்லாம்
நீ…ங்கள்
உங்களைப்போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்
எப்பொழுதும் போல உங்களை ஃப்ரியாக விடுங்கள்.
ஆழம் தெரியாத ஞானம்
“நீ எவ்வளவு ஆழமிருப்பாய் ” என்றான்
அதைப்பற்றியெல்லாம் தெரியாததால்
கிணறு தெரியாததைப்போலவே இருந்தது.
மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்து விட்டு
வந்த வேலையில் கண்ணாகக் குதித்தான்,
முத்தி மேலே வந்தவனிடம்
“தான் எவ்வளவு ஆழமிருந்தேன்” என
கேட்க அவசியமில்லாததால்
அது கேட்கவே இல்லை
அதைச் சொல்ல விருப்பமற்றவன் போல
அவனும் குப்புற மிதந்துகொண்டிருந்தான்.
வேடிக்கை
ஒரு சித்தெறும்பு அதனின் பளுவானதொரு உணவுப் பரலோடு தன் பாடினை
மேலும் கனமேற்றிக்கொண்டிருக்கும் நிகழ்வுதான்.
எனினும்,
ஏனதில்
ஓர் ஏகுவான எடையின்மையைக் காட்சிப்படுத்திக்கொள்கிறது
இப்பார்வைப்போலி.
வேடிக்கைக்கு அவ்வளவுதான் தகும்.