cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 கவிதைகள்

வசந்ததீபன் கவிதைகள்


1. மிதக்கும் குமிழிகளின் புன்னகை

குமிழிகள் உடைந்து உடைந்து போகின்றன
அக்கறையாய் உருவாக்குகிறேன்
க்ஷண நேரம்
தங்க மாட்டேன் என்கிறது
குதிரையாய் விரைகிறது காலம்
விறகுக் கட்டாய் கனக்கிறது இருப்பு
கழுதையாய் சுமந்தபடி நகர்கிறான் அவன்
தொட்டிலில் இல்லை
நெஞ்சில் இருக்கிறது
குழந்தையில்லாத வீடு
படகு பத்திரமாய் இறக்கிவிட்டது
கரையிலிருந்து நன்றி சொல்கிறேன்
நீரலைகள் என் கால்களை முத்தமிடுகின்றன
தனிமை மலர்ந்திருக்கிறது
அமைதி கமழ்கிறது
சிறு பாறை புத்தர் சிலையாகிறது
சிலுவை இம்மையின் நரகம்
சிதறிக் கிடக்கின்றன அப்பாவிகளின் உதிரத் துளிகள்
முள் கிரீடமும் சவுக்கும் புதிதாய்
இருக்கின்றன
கண்ணாடிகள் உடைந்து கிடக்கின்றன
தாண்டிச் செல்கிறேன்
எனக்குள் அழுகை ஒலி கேட்கிறது
சாத்தான்கள் சீருடைகள் அணிந்திருக்கின்றன
அதிகாரங்களை ஆயுதங்களாக ஏந்தியிருக்கின்றன
நாடு நகரத்திற்குள் அகலாத இருட்டு
இரவு மயங்கிப் போனது
இயற்கை உறங்குகிறது
இரு மனசுகள் விழித்திருக்கின்றன
தூங்க வேண்டும்
இன்னும் வரவில்லை
வழி பார்த்துக் காத்திருக்கிறேன்
நனவில் பயம் சூழ்கிறது
நிஜங்கள் குரூரம் நிரம்பியது
கனவுகள் இதமாயிருக்கிறது
பூக்கள் அன்பைச் சொல்கின்றன
அன்பு வாழ வைக்கிறது
வாழ்வு கனவுகளில் மிதக்கிறது.

2. பூக்களின் மெளனத்தில் யுத்தம்

பறந்திட நினைக்கிறேன்
உன் நினைவுகள்
பாராங்கல்லாய் நெஞ்சை அழுத்துகின்றன
ஒன்று பூட்டுகிறது
ஒன்று திறக்கிறது
இரண்டும் ஒன்றென்றால் நீங்கள் ஏமாந்து போவீர்கள்
புத்தனாக விருப்பம் கொண்டேன்
சித்தார்த்தனாக இல்லை என்பது நினைவுக்கு வந்தது
சாதாரணனாக இருந்துவிட முடிவு செய்தேன்
கனவுகளைத் தின்பவன்
கடும் விஷம் அருந்துகிறான்
கரையும் நொடிகள் ஊடே சாகாமல் சாகிறான்
பனிக் காற்றில் உறைகிறான்
அவளின் பார்வை தொட்டணைக்கிறது
கதகதப்பு மெல்ல உள்ளூரப் பரவுகிறது
முற்றிய தானியமாய் நிற்கிறாள்
கொய்திட முன் செல்கிறேன்
காற்றின் அலைவில் நழுவிநழுவி விலகிஓடுகிறாள்
சடை பின்னிய தலையில் பூவைச் சொருகினாய்
மனசெல்லாம் வாசமித்தது
விழிகள் கிறங்க தள்ளாடிக் கடந்தேன்
பொட்டு வைப்பது விருப்பம் சார்ந்தது
பொட்டு வைக்காதது உரிமை சார்ந்தது
பொட்டுவை வைத்து சூதாடுவது ஆணாதிக்கம்.

3. அரவம் சுற்றிய வாழ்வு

பகிர்ந்து கொள்ளுங்கள்
பூக்கள் பூத்து நறுமணம் கமழும்
உன்னதமானது அன்பு
அனைவரும் அழுகிறார்கள்
அச்சிறுவனும் அழுகிறான்
அவர்களுக்குத் தெரிந்த காரணம் அவனுக்குத் தெரியவில்லை
வெயில் வானுடைய கொட்டுகிறது
வெம்மை காந்துகிறது
சிறு செடியைப் பிடுங்கிக் குடையாய் பிடிக்கிறேன்
மலையைப் பார்த்துப் பிரமித்தேன்
என்னைப் பார்த்து மலை அதிசயித்தது
பூடகமான ஆச்சரியங்கள்
வெயிலில் நனைந்து கொண்டிருக்கிறான்
அவன் இருதயத்துக்குள் மழை பெய்கிறது
மழையும் வெயிலும் அவனது ரகசியங்கள்
பூச்சிவகைகள் இருக்கின்றன
1. நன்மை செய்பவை 2. தீமை செய்பவை
மூன்றாவதோ நன்மை செய்பவைகளை அழிப்பவை
கந்தலாடை அணிந்திருக்கிறான்
அவனது வயிற்றுக்குள் பெருச்சாளிகள் கத்துகின்றன
ஒளிந்து கொள்ள இடம் தேடுகிறான்
அந்த வீடு ஆளரவமற்றிருந்தது
கடன் கொடுத்தவர்களென யாரோ வருகிறார்களாம்
வாசலுக்கு முன்சின்ன விளக்கு எரிந்தபடி இருக்கிறது.


 

About the author

வசந்த தீபன்

வசந்த தீபன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website