cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 கவிதைகள்

ஜெயபால் பழனியாண்டி கவிதைகள்


மிருகமொன்று மனிதனாகிறது

திறந்தவெளி கொடிய மிருகம் நான்
அவ்வப்போது கதவைத் தாளிட்டு
தள்ளப்படுகிறேன்..
அடக்கமுடியா போதையொன்று
என்னை ஆக்கிரமைத்துக் கொள்கிறது..
புத்தக நெடி அறை முழுதும்
என்னைத் திணறடிக்கின்றது…
புத்தகத்தின் சொற்களைப்
பொடியாக்கி பொடியாக்கி
என்னுள் நுகர்கிறேன்..
சொர்கத்தைத் தொட்டு சொர்கத்தைத் தொட்டு
பூமி திரும்புகிறேன்..
கதவு தட்டும் போதெல்லாம்
காதை அடைக்கிறேன்..
கோபத்தில் திமுறுகிறேன்..
போதையின் வாசத்தை அள்ளி அள்ளி
வாக்குள் நிரப்புகிறேன்…
அறையின் நீள்வட்ட சுற்றலுக்குப்
பிறகாக கண்கள் திறப்பதும்…
கதவு உடைவதுமான ஒருசேர நிகழ்வில்
ஒரு மிருகம் மனிதனாக
அறையை விட்டு வெளியேறுகின்றது..

சிவப்பு மஞ்சள் பறவை

சாலையில் சரிந்திருந்த
இலைகளை கூடைக்குள்
ஒன்றாக அடுக்கிக்கொண்டிருந்தான் அவன்..
புதுயிடம் கிடைத்த உற்சாகத்தில்
குட்டிக் குழந்தைகளாக
குதூகலமிட்டன இலைகள்..
கீழும் மேலுமாக தங்களை
ஆசுவாசப்படுத்திக் கொண்டதில்
புதுப் பூங்காவிற்கு சென்ற மகிழ்ச்சி..
சிறு துவாரங்களுக்குள் வெளியேறிய
இலைகளின் ஈரசுவாசம்
சாலையின் வாகனங்களை
நனைத்தது..
உடலைச் சிலிர்த்துக் கொண்டாள்
சீருடை அணிந்த சிறுமி…
ஒரு நீண்ட பயணத்தில்
மரணித்த இலைகள்
மீண்டும் மரணித்தன..
இலையின் நரம்புகளில் வழிந்தோடிய
சிவப்பு மஞ்சள் நிறமிகள்
சாலையில் கரைந்தோடின.
சில அவன் முதுகில்…
பின்தோள்பட்டையில்…
அழுக்குப்படிந்த சட்டையில்..
சில அவன் காலாடைக்குள்ளாகவும் நுழைந்திருந்தன..
மாலையில்…
அவன் கால்களில் வேர்விடத்தொடங்கிய
மரங்கள்..
சட்டை பித்தான்களின் இடைவெளியில்
முளைத்திருந்தன..
எங்கிருந்தோ வந்த பறவை ஒன்று
அவன் தலையில் கூடுகட்டியது..
பறவை வைத்துச் சென்ற முட்டையின் வாய்ப்பிளந்து..
இப்போது பறக்க ஆயத்தமாகிறது
ஒரு சிவப்பு மஞ்சள் வண்ணப் பறவை…
மலைக் காட்டிற்குள் விழுந்த
பறவையின் எச்சத்தில்
முகிழ்த்தெழுகிறது
ஒரு மரம்…
கிளைகளுக்கொன்றாக
பச்சை மனிதர்கள்
படர்ந்திருக்கிறார்கள்…
அத்துவானக் காட்டில்
மரணித்த இலைகளைத் தேடிப்
பறக்கிறது ஒரு பறவை…

 


 

About the author

ஜெயபால் பழனியாண்டி

ஜெயபால் பழனியாண்டி

ஜெயபால் பழனியாண்டி நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர். பாரதியார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர்.
கவிஞர், எழுத்தாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என்ற பன்முக ஆளுமை கொண்டவர்.
சிற்றேடு, உயிர் எழுத்து, நுட்பம் ஆகிய இதழ்களில் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. மிதக்கும் வெளி, ஆதலால் சொல்கிறேன் இவருடைய கவிதைத் தொகுப்புகள். மினிமலிசம் என்னும் தன்னம்பிக்கை நூல் இவருடைய சமீபத்திய படைப்பாகும்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website