cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 கவிதைகள்

நந்தாகுமாரன் கவிதைகள்


இரவின் ‘ரூபிக்ஸ் க்யூப்’

காலச்சக்கரம் நின்று விட்டது
நிறுத்தப்பட்ட இந்த மின்விசிறி போல
அந்தரத்தில் உறைபனி மழையெனத்
தொங்குகிறது அகாலம்
இந்த அறை
ஒரு ‘ரூபிக்ஸ் க்யூப்’ ஆக உருமாற்றப்பட்டு
ஏற்கனவே சுயம்புவாக உருவான
தீர்வுகளின் பிரச்சனைகளை நோக்கிச்
சுழற்றப்படுகிறது
அடர் இருள்
இடறி விழுந்த இடத்தில்
சப்தத்தின் முதற் பிறை வெளிச்சம்
இரவின் கரும்பலகையில்
எதையாவது
கிறுக்கக் கிறுக்கக்
கிறுகிறுத்துச்
சிறுகச் சிறுகச்
சாக்காடத் துணிந்த கணம்
நல்லவேளை கேட்டது
கல் தொலைவில் காப்பாற்றியது
நள்ளிரவின் உரலில் இடிபடும்
அனாமதேயக் குரல் ஒன்று
அது என்னுடையதா என யோசித்தபடியே
உறங்குவது போலும்
வாழும் காலம்.

ஜொலிக்கும் அமாவாசை

மழைச்சாரல்
மூடிய கதவுகள்
சிற்றுயிர்களின் முணுமுணுப்புகள்
இடி முழக்கங்களாகின்றன

நடைப்பயிற்சியின் போது
முழங்கையில் விழுந்த
என் முதல் மழைத்துளி ஸ்பரிசம்
கரம் உயர்த்தித் தலை திருப்பி இமை ஒதுக்கிப்
பார்த்த கணம்
சுவாசத்திற்குள் மண்வாசனையின்
நடைப்பயிற்சி துவங்குகிறது

அடர்மழை
கடுங்குளிர்
இன்னும் ஆழமாகப் புதையும்
உன் நினைவின் உயரம்

மழையில் குளிர்ந்த விரல்கள்
உன்னைத் தொட்டதும்
தேநீர் மேஜையில் தேங்கி விட்ட
உன் கோப்பையின் சூடு
என் ஆவிக்குள் பரிமாறப்படுகிறது

இந்த மழையின்
சிறு துளிக் குறுவாள்
காற்றின் சில்லிடலில்
எனக்கும் உனக்குமான
ஒரு நாள் பனிப்போர் முடிகிறது

பல்லியின் சப்தம்
பார்வை உயர்த்தும் பூனை
என்னையும் பார்த்து விடுகிறது

ஜொலிக்கும் நிலவொளி
இரவின் பல குரல்களில்
கூடும் இன்மையின் ஆழம்

நள்ளிரவை உடைத்து
ஊளையிடும் தெருநாய்
பனித்துளிப் பேழைகளில்
வெறுமையின் சுக்கிலம்

கண்கள் மூடிய பூனை
வெளிச்சத்தில் விட்டு வந்த தன் மிச்சத்தை
இந்தத் தன் ‘பால்வெளியில்’ தேடுகிறது

ஒரு ‘டார்க் மோட்’ சொல்லின்
நிலவொளி வசியத்தியல் திமிறும்
கடவுளின் பரிசோதனை எலி
நீ அல்லது நான்

சொல் சப்தம் தூரம் காலம் காது
இன்னும் ஒரு துளி அமில மழை
வீழ்கிறது உன் மௌனத்தின் மேல்
சொட்டுச் சொட்டாக.


 

About the author

நந்தாகுமாரன்

நந்தாகுமாரன்

பெங்களூருவிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் கணினித் துறையில் பணிபுரியும் கவிஞர் நந்தாகுமாரன் பிறந்த ஊர் கோவை. இலக்கியம், ஓவியம், ஒளிப்படம் போன்ற கலைத்துறையில் ஆர்வமுள்ள இவர், ‘மைனஸ் ஒன்’ ( உயிர்மை வெளியீடு - 2012), பாழ் வட்டம் ( காலச்சுவடு பதிப்பகம் -2021) உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும், மின்னூல் பதிப்பாக ‘நான் அல்லது நான்’ சிறுகதைத் தொகுப்பு நூல், ‘ கலக லகரி’ ( கவிஞர் பெருந்தேவியின் எதிர்கவிதைகள் முன்வைத்து எழுதப்பட்ட ரசனை பதிவுகள்) உள்ளிட்ட நூல்கள் வெளியாகி உள்ளன. ஹைக்கூ வகை கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுடைய நந்தாகுமாரன் அயல் மொழிகளிலுள்ள கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து அளித்தது கவனத்திற்குரியது. பயணம் சார்ந்த புனைவுகளை எழுதும் ஆர்வமுடைய இவர் தற்போது ‘ரோம் செல்லும் சாலை’ எனும் புனைவு நூலை எழுதி வருகிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website