கதவு தானாக அடைத்துக் கொள்ளும் அறை.
அதற்குள், ஆவி பறக்க சூடான தேநீர் கோப்பையை
வைத்துவிட்டுச் செல்கிறாள்.
கடும் சூட்டினை இவள் எப்படித்தான்
குடிக்கிறாளோ என நினைக்க
தேநீரின் சூடு அதிகரித்துக் கிளம்புகிறது.
அறைக்குள் புதிய வெப்பநிலை மாற்றம்.
வணக்கம்.
தற்பொழுது பிரதியொன்றின் FM உடன்
இணைந்திருக்கிறீர்கள்.
அறைக்குள் அதிகரித்த புதிய வெப்பநிலையினால்
ஏற்பட்ட மாற்றங்களை
களத்திலிருந்து நேரடியாவே
உங்களுக்கு ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறோம்.
இங்கே,
ஒன்றின் மீதொன்றென அடுக்கியிருந்த
புத்தகக் குவியலொன்று, மெல்ல உருவழிந்து
தேன்கூடு போலாகிறது. அவைகளின் சொற்கள்
கூட்டை மொய்த்து முனகும் சப்தங்களை
ஓரளவு கேட்கமுடிகிறது.
மேசையிலிருக்கும் பேனா
வெப்பத்தைச் சமாளிக்க வளைந்து புரண்டதில்
தன்னை ஒரு வில்லாக மாற்றிக் கொள்கிறது.
வில்லிலிருந்து புறப்படப் போகும் சொற்கள்
உங்களைத் தாக்காமல் இருக்க
அவைகளை வாசிக்காமல் கடந்து போகலாம்.
கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு
கேட்டுக் கொள்கிறோம்.
இதோ,
அவள் எழுதிவைத்த கவிதை
தன்னை மெலிதாய்ப் பரப்பி மேலெழுகிறது.
அதன் இறுதி வரி
மீன் வால் போல் அசைய நீந்திச் செல்கிறது.
இத்தனையும் பார்த்து
இங்குள்ள நிலவரத்தை உங்களுக்கு அறியத்தரும்
என் முகம் என்னவாகி இருக்கிறதெனப் பார்க்க
கண்ணாடி இருந்த இடத்திற்கு வந்தால்
இங்கே, குவியலாகக் கிடந்து நெளிவது கண்ணாடிதான்.
அவைகளுக்கு அருகில் முகத்தைக் கொண்டு சென்றால்
பிம்பத்தைக் காட்டுவதாக இல்லை.
அவள் மீண்டும் கதவைத் திறக்க வருவதால்
கொஞ்சம் ஒளிந்திருந்து நிலவரத்தை அறியத்தருகிறோம்.
அவள் திறந்ததும்
காத்திருந்தது போல் முண்டியடித்து வெளியேறுகிறது
அறைக்குள்ளிருந்த ஒரு தொகை வெப்பம்.
அறையின் உருமாற்றம்
அவளை ஆச்சரியப்படுத்தவில்லை.
நுழைந்தவள்
ஒரே மிடறில் தேநீரைக் குடித்து முடிக்கிறாள்.
தற்சமயம்
அறைக்குள் உருவாகியிருக்கும்
மற்றொரு வெப்பநிலை மாற்றத்தைச் சொல்ல
சுவர் ஆணியில் தொங்கி அசையும்
அவள் கவிதையிலிருந்து துவங்கலாம்.
சிறிய விளம்பரத்தின் பின்
மீண்டும் சந்திப்போம்.
இணைந்திருங்கள்.