cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 கவிதைகள்

க.சி.அம்பிகாவர்ஷினி கவிதைகள்


1. இளைப்பாறுதல்

இளைப்பாறத் தேநீரைத் அருந்திவிட்டு
இடைநின்ற பயணத்தைத் தொடர
சாலையோரம்
குளம்நிறையப் பூத்திருக்கின்றன
தாமரைகள்
ஓட்டுநர் சொல்கிறார்
பத்து நிமிடங்கள் வீணாகுமென
மகிழுந்தைவிட்டு இறங்கி
குளத்தருகே போயிருந்தால்
பத்தென அதற்குமேலும்
நிமிடங்களும் வீணாகியிருக்கும்.

2. நட்டமாய் நிறுத்துதல்

உடைந்து முறிந்த கிளை
மரத்திலிருந்து
தன் விலாஎலும்புகளின்
கடைசி வலிமையை இழந்து நோகிறது
கைக்கெட்டிய என் வானத்தை
தலைக்குமேல் தூக்கிவைக்க
உடைந்த கிளையை
அதன் உருக்கு நோவிலிருந்து மீட்டு
நட்டமாய் நிறுத்தினேன்.


3. கங்கா தீர்த்தம்

சின்னதாய் செப்புப்பானையில்
சில்வர் தகட்டால் மூடிய
கங்காதீர்த்தம்
காசியில் பிரசித்தம்
அடக்குமுறையில் துளையிடப்
படாதபாடுபட்டு
குளிநீரில் கலந்துவிட்டுக் குளிக்க
கொஞ்சமும்
பாவங்கள் தீர்ந்த
கற்பனையில்லை.

4. பிஷான் சிங்கின் மரணம்
(தோபாதேக்சிங் எங்கே)

வட்டவட்டமாக சப்பாத்தியுருண்டைகளை தேய்த்துக்கொண்டிருக்கிறேன்
தோபா தேக் சிங்
பாகிஸ்தானிலிருக்கிறதா
இந்தியாவிலா?
இன்றைக்குப்போல இந்தச்
சப்பாத்திகள்
இவ்வளவு வட்டமாக
வந்ததில்லை
தோளில் கிடந்த தூசிதட்டும்
சமையல்துண்டை
அதன் கோபுரமாகிய
ஸ்வெட்டரைத் தொங்கவிட்டிருக்கும்
இரும்பு அலமாரியில்
நட்டுக்குத்தலாக நிற்கும்
நான்கு கால்களில்
ஒன்றின் தலைமுடுக்கில் மாட்டிவிட்டு வந்தேன்
வலதுகாலில் ஒட்டும்
சிதறிய கோதுமை மாவின் துகள்களில்
அதிர்ந்து மென்மையாய்
உள் கைதியொருவன்
அமிழ்ந்துபோனான்
பிஷான் சிங் …பிஷான் சிங்…
பிஷான் சிங்கின் கண்கள்
விழித்துக்கொண்டன
மௌனம் தகர்க்கத் தகர்க்க
தன்
சப்பாத்திகளைச் சுட்டபடி
சட்டகத்திற்குள் தெரியும்
நீலவானத்தின் இருண்மையைக்
கேட்கிறான்
தோபாதேக்சிங் எங்கே
தோபாதேக்சிங் எங்கே
பிஷான் சிங்
இறந்துபோனதொருவரின் ஆவி
இப்போது சடலம்
அவன் கேட்கிற கேள்விக்கு
சதத் சொல்கிறார்
பதினைந்துவருடங்களுக்கும் மேலாக
உட்காராத கால்களின்
வீக்கத்திற்கு
ஒருநாள் விடியல் வந்ததென்று.


 

About the author

க.சி.அம்பிகாவர்ஷினி

க.சி.அம்பிகாவர்ஷினி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website