அறியாது இழைத்த
சிறு தவறை
திருத்தலுக்குத் தப்பிய
எழுத்துப் பிழைகளை
நினைவுகளின் ஓட்டைகளில்
கசிந்தோடும் இரவுகளை
கால் இடறிய கற்களை
காலம் தந்த சறுக்கல்களை
பள்ளம் விழுந்த பாதைகளை
கூட்டைதவிர வேறு வழிகளற்ற
நேசத்தின் வரைபடங்களை
இன்னும் கடந்த காலத்தின்
எல்லாக் கசப்புகளையும்
அந்தப் பெயர் அறியா
காட்டாற்று வெள்ளத்தில்
எப்போதோ வீசிவிட்டேன்.
விடாப்பிடியாக இத்தழும்புகளுக்கு
மயிலிறகு தரும் மனிதர்களை மட்டும்
யாரேனும் கொஞ்சம் ஆற்றுப்படுத்துங்களேன்…
குரல் : ஐ.கிருத்திகா
அன்பின் பெயரால்
சுடசுட நாளை தொடங்கிவைக்கிறது
பெருங்கசப்பொன்று
மிடறுமிடறாய் அன்றியும்
ஒரே மூச்சில் அன்றியும்
உட்கொள்ளாமல் மீதம் வைக்கையில்
என்னையது விழுங்க தொடங்கியிருக்கும்
அந்த நிமிடத்தில் தான்
சபிக்கத் தொடக்கியிருப்பேன்
பாதைகளைத் தேர்ந்தெடுத்த
என் புத்திசாலித்தனத்தை.
தவறவிட்ட பாதைகள் போலன்றி
திகிலூட்டுகின்றன
வீட்டிற்கான பாதைகள்.