மணமெனும் மாய ரயில்
எப்போதோ வரப்போகும் ரயிலுக்காக
காத்திருக்கும் சிறுமி
முதலில் மாதங்களை எண்ணுகிறாள்
பிறகு வாரங்களை
பின் நாட்களை
மணிகளை, நிமிடங்களை, நொடிகளை
இதோ அவள் ரயில் வந்துவிட்டது
ரயிலின் பிரம்மாண்டத்தில், நுட்பத்தில், தனித்தன்மையில்
பயந்துபோன அவளுக்கு இப்போது ரயில் ஒரு ராட்சசன்
தடக் தடக் சத்தங்களும்
கோட்டானை ஒத்த கூவுலும்
இயல்பில் அமரவிடாத ஆட்டத்திலும்
ரயிலை வெறுக்கும் சிறுமி
எப்போதுமே வராத
ரயிலை விட்டு இறங்கும் கணங்களை எண்ணத்தொடங்குகிறாள்
நொடிகளை
நிமிடங்களை
நாட்களை
வாரங்களை
மாதங்களை,ஆண்டுகளை, நூற்றாண்டுகளை…
திருமணம் பற்றிய மறைமுக சொற்கள்
காலையில் படுக்கை விரிப்புகள்
கலைந்திருப்பதைக் கண்டு
அம்மா மகிழ்கிறாள்
அப்பாவின் காதில் குசுகுசுக்கிறாள்
இருவரும் சிரித்துக்கொள்கிறார்கள்
எனக்கும் கூட சிரிப்பு வருகிறது
முழுபோதையின் கனவுகளில்
நீ மட்டும் புரண்டு கசங்கிய
படுக்கை விரிப்புகளில்
என்னை நான் இதுவரை
கண்டெடுத்ததில்லை தெரியுமா?
Art Courtesy : buzzfeed.com